கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி வீராணம் ஏரியில் இறங்கி விவசாயிகள், வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்

கல்லணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி வீராணம் ஏரியில் இறங்கி விவசாயிகள், வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்

கல்லணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வீராணம் ஏரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், விவசாயிகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 63 நாள்களாகியும் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலிலுள்ள வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.
 இதனால், நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களில் பயிர்கள் கருகின.
 மேட்டூர் அணை நீரை கல்லணையில் இருந்து வீராணம் ஏரிக்கு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித் துறை அதிகாரிகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் தராத கர்நாடக அரசைக் கண்டித்து, வீராணம் ஏரியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமை வகித்தார்.
 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் ஒரு பகுதியினர் சட்டை அணியாமல், நெற்றியில் நாமத்துடன் மண் சட்டி ஏந்தி முழக்கமிட்டனர். பின்னர், எலியை தீயில் சுட்டு சாப்பிட்டனர். பெண்கள் ஒப்பாரி பாட்டு பாடி நாற்று நட்டனர்.
 பின்னர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிக்காக, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையில் இருந்து கீழணைக்கு வரவில்லை. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 கல்லணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறுவது ஏமாற்று வேலை. விவசாயிகளிடம் கடன் தொகையை வசூலிப்பதில் வங்கிகள் கடுமையாக நடந்துகொள்வதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.
 எங்களது அடுத்த கட்ட போராட்டம் சென்னையில் நடைபெறும்.
 எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து முறையான அழைப்பு வரப்பெற்றால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பேன். உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்ததை போல 3 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையும் வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கும் என்றார் அவர்.
 ஆர்ப்பாட்டத்தில், தவாக தலைமை நிலையச் செயலர் ராயநல்லூர் உ.கண்ணன், மாவட்டச் செயலர் மு.முடிவண்ணன், நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், மாவட்டத் தலைவர் மு.ஆளவந்தார், மாவட்ட மாணவரணித் தலைவர் ஆ.பிரகாஷ், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ச.கா.ராஜேந்திரன், மு.பாலகுருசாமி, விவசாய சங்கத் தலைவர்கள் பி.ரவீந்திரன், கே.வி.இளங்கீரன், விஜயகுமார், வெங்கடேசன், பாலு, ராஜேந்திரன், ரங்கநாயகி, தவாகா ஒன்றியச் செயலர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 கீழணையிலிருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள், வாழ்வுரிமைக் கட்சியினரின் போராட்டத்தையடுத்து, கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com