கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளி இனிக்குமா? ரூ.400 கோடி நிலுவை தொகை பாக்கி

தனியார் சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள சுமார் ரூ.400 கோடி நிலுவைத் தொகை தீபாவளிக்கு முன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் கரும்பு விவசாயிகள் உள்ளனர்.
கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளி இனிக்குமா? ரூ.400 கோடி நிலுவை தொகை பாக்கி

தனியார் சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள சுமார் ரூ.400 கோடி நிலுவைத் தொகை தீபாவளிக்கு முன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் கரும்பு விவசாயிகள் உள்ளனர்.
 கடலூர் மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 22 ஆயிரம் விவசாயிகளால் கரும்பு பயிரிடப்படுகிறது. விளைவிக்கப்படும் கரும்புகள் அனைத்தும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் 3 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கரும்பிலிருந்து சர்க்கரை, எத்தனால் ஆகியவை தயாரிக்கப்படுவதோடு கரும்புச் சக்கை காகிதம் தயாரிப்புக்கு மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.
 கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அதற்கான விற்பனை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விலையை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அதன்படி 2015-16ஆம் ஆண்டுக்கு கரும்புக்கான ஆதார விலையாக டன்னுக்கு ரூ.2,300, போக்குவரத்து செலவாக ரூ.100 வீதம் மொத்தம் ரூ.2,400 வழங்கிட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மாநில அரசு கூடுதல் ஆதார விலையாக டன்னுக்கு ரூ.450 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.2,850 வீதம் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும்.
 ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகள் மாநில அரசு அறிவித்த கூடுதல் ஆதார விலையை விவசாயிகளுக்கு வழங்காமல் பாக்கி வைத்துள்ளன. சில ஆலைகள் மத்திய அரசு அறிவித்த விலையையும் விவசாயிகளுக்கு வழங்கவில்லை.
 இதன்படி சேத்தியாத்தோப்பில் செயல்படும் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை ரூ.80 கோடி பாக்கி வைத்துள்ளது. தனியார் ஆலைகளில் நெல்லிக்குப்பம் ஈஐடி ஆலை ரூ.120 கோடி, பெண்ணாடம் அம்பிகா ஆலை, வேப்பூர் ஆரூரான் ஆலை தலா ரூ.100 கோடி வீதம் பாக்கி வைத்துள்ளன. சுமார் ரூ.420 கோடி வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பல்வேறு வகைகளில் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
 இதுதொடர்பாக விவசாய சங்கங்கள், அனைத்துக் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டங்களிலும் வலியுறுத்துகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் த.பொ.ராஜேஷ், தீபாவளி பண்டிகைக்குள் விவசாயிகளுக்கு பாக்கித் தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும். இல்லையெனில் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆட்சியரின் இந்த உத்தரவு விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன் கூறுகையில், சர்க்கரை ஆலைகள் கடந்த 3 ஆண்டுகளாகவே பாக்கி வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையான பண நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் ஆலையின் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு வழங்க வேண்டுமென நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது. அதன்படி ரூ.200 கோடி வழங்க வேண்டியுள்ளது. இத்தொகையையும் வட்டியுடன் சேர்த்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 பெண்ணாடத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஆர்.சோமசுந்தரம் கூறுகையில், ஆலைகள் பணம் வழங்காததால் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. வங்கிகளில் புதிய பயிர்க்கடன் வழங்க மறுக்கிறார்கள். ஏனெனில் எங்களது கரும்பு உற்பத்தியை கணக்குக்காட்டி வங்கிகளில் ஆலை நிர்வாகத்தினர் கடன் பெற்றுவிட்டார்கள். அதற்கான பணத்தை செலுத்தினால் மட்டுமே நாங்கள் மற்ற பயிர்களுக்கு கடன் பெற முடியும். எனவே ஆலைகள் பாக்கித் தொகையை வழங்குவது மட்டுமே இதற்குத் தீர்வாகும் என்றார்.
 சர்க்கரை ஆலை தரப்பில் கூறுகையில், தற்போது தொழில் நெருக்கடி நிலவுகிறது. சர்க்கரை விலை குறைந்ததால் மாநில அரசு நிர்ணயித்த விலையை வழங்க முடியவில்லை. எனவே அரசிடம் நிதி கோரி அணுகியுள்ளோம். அந்த நிதி கிடைத்தால் பாக்கித்தொகையை வழங்க முடியும் என்கின்றனர்.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகைக்குள் பாக்கித் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை பெற்றுத்தருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக 4 சர்க்கரை ஆலை நிர்வாகிகளையும் அழைத்து தனிப்பட்ட முறையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளுக்குள் பணம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com