விவசாயத்தில் தண்ணீர் பயன்பாட்டை குறைக்கும் நீர்க் குழாய்: வேளாண்மை துறை ஆலோசனை

விவசாயத்தில் தண்ணீரை சிக்கனப்படுத்தும் நீர்க் குழாய்களை விவசாயிகள் அமைக்க வேண்டுமென கடலூர் மாவட்ட வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

விவசாயத்தில் தண்ணீரை சிக்கனப்படுத்தும் நீர்க் குழாய்களை விவசாயிகள் அமைக்க வேண்டுமென கடலூர் மாவட்ட வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பெ.ஹரிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் சாகுபடியில் பாசன நீர் தேவை முக்கிய தனித்துவம் வாய்ந்த இடுபொருளாக உள்ளது.
 பாசனத் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் குறைவு, நீர்ப் பங்கீட்டில் சிக்கல், நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சுதல் ஆகியவற்றினால் நெல் உற்பத்தி பாதிக்கும் சூழல் உள்ளது.

 இருப்பினும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நெல் உற்பத்தியை அதிகரித்தே ஆகவேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

 குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு நெல் உற்பத்தியை அதிகரிக்கும் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

 பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலாவில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு பரவலாகக் கடைபிடிக்க தொடங்கியுள்ள பானிபைப் (வயல் நீர் குழாய் முறை) மூலம் தேவையறிந்து நீர் மேலாண்மை செய்யும் முறை மிகவும் இன்றியமையாததாகும்.

 மிக சொற்பமான தொகை செலவு செய்து விலை மதிப்பற்ற தண்ணீரை சிக்கனமாக தேவைக்கேற்ப பயன்படுத்த உதவிடும் எளிய முறையாக உள்ளது.
 நெல்வயலில் நீர்குழாய் மூலம் பாசன மேலாண்மை செய்வதனால் காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் மேலாண்மை செய்யப்படுகிறது. ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய வழக்கமான முறையில் 2,000 லிட்டர் நீர் தேவைப்படும். நீர்குழாய் முறையில் 1,400 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. மின்சாரம், டீசல் தேவை குறையும். நிலத்தடி நீர் விரையமாவது தடுக்கப்படுகிறது. வளிமண்டலம் வெப்பமாகக் காரணமான மீத்தேன் வாயு வெளியாவது பெருமளவு குறைகிறது. உற்பத்தி திறன் 15 சதம் வரை கூடுகிறது.

 இதனை அமைப்பதற்கு எக்டருக்கு 4 எண்கள், 1 அடி நீள, 4 அங்குல அகலமுள்ள கீழ்வாட்டில் துளையிடப்பட்ட பி.வி.சி குழாய்கள் தேவைப்படும்.
 ஒரு குழாயின் மதிப்பு ரூ.200 மட்டுமே.

 எனவே நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தவறாது பானிபைப் எனும் நெல் வயல் நீர் குழாய் முறை மூலம் பாசன நீர் மேலாண்மை செய்து நீர் சிக்கனத்தை கடைபிடிப்பதுடன் மீத்தேன் வாயு வெளியாகி புவி வெப்பமயமாதலை தடுத்து சுற்றுக்சூழல் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com