இன்று உலக புத்தக தினம்: அரசு நூலகங்களில் குவிந்துள்ள 21 லட்சம் புத்தகங்கள்

உலக புத்தக தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. வாசகர்களின் பயன்பாட்டுக்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் சுமார் 21 லட்சம் புத்தகங்கள் குவிந்துள்ளன.

உலக புத்தக தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. வாசகர்களின் பயன்பாட்டுக்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் சுமார் 21 லட்சம் புத்தகங்கள் குவிந்துள்ளன.
உலக புத்தக தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்.23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு நூலகம் திறந்தால் நூறு சிறைச்சாலைகள் மூடப்படும் என்ற வாசகத்துக்கேற்ப, திறக்கப்படும் நூலகங்களை பொதுமக்கள் பயன்படுத்தினால் சிறப்பான முன்னேற்றம் காண முடியும்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகம், 70 கிளை நூலகங்கள், குழந்தைகள் நூலகம் ஒன்று, 43 ஊர்ப்புற நூலகங்கள், 26 பகுதிநேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நூலகங்களில் சுமார் 1.80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். வாசகர்கள் பயன்படுத்துவதற்காக அனைத்துத் துறைகளையும் சேர்ந்த சுமார் 21 லட்சம் புத்தகங்கள் மாவட்டம் முழுவதும் நூலகங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இதில் கடலூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மட்டும் 1,63,942 நூல்கள் உள்ளன. இங்கு 23,050 பேர் உறுப்பினர்களாகவும், தினமும் வந்து செல்லும் வாசகர்கள் 500 முதல் 600 பேர் வரையிலும் உள்ளனர். நூல் இரவலாக நாளுக்கு 200 நூல்களும், குறிப்புதவி நூல்களாக 750 நூல்களும் வாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது.
மைய நூலகத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்கே நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையமாகும். இந்தப் மையத்தில் பயின்று தேர்வு எழுதியவர்களில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-1 தேர்வில் ஒருவரும், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி-2 தேர்வில் 2 மாணவர்களும், அதே ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் 2 பேரும் தேர்வாகினர்.
வங்கித் தேர்வில் இங்கு பயின்று தேர்வெழுதிய 19 பேரில் 10 பேரும், எஸ்பிஐ வங்கித் தேர்வில் பயின்ற 15 பேரில் 14 பேரும், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி-4 தேர்வில் 18 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, நமது அறிவை விசாலமாக்கவும், வேலை வாய்ப்பினை பெற்றுத்தரவும் உதவும் நூலகங்களை உலக புத்தக தினத்தை முன்னிட்டு இனிமேல் தினமும் பயன்படுத்த உறுதியேற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com