பெண் குழந்தைகள் காப்போம் திட்டத்தில் பரிசு: அங்கன்வாடிப் பணியாளர்கள் பேரணி

பெண் குழந்தைகள் காப்போம் திட்டத்தில் இந்திய அளவில் கடலூர் மாவட்டம் பரிசு பெற்றதை முன்னிட்டு, கடலூரில் அங்கன்வாடிப் பணியாளர்கள் பங்கேற்ற பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பெண் குழந்தைகள் காப்போம் திட்டத்தில் இந்திய அளவில் கடலூர் மாவட்டம் பரிசு பெற்றதை முன்னிட்டு, கடலூரில் அங்கன்வாடிப் பணியாளர்கள் பங்கேற்ற பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய அளவில் பெண் குழந்தைகள் பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாவட்டங்களில் 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தியதால் கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளது. இதற்காக இந்திய அளவில் கடலூர் மாட்டம் பரிசு பெற்றது.
இதனைக் கொண்டாடும் வகையிலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாகவும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற பேரணி கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. பேரணியை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில்,
மாவட்டத்திலுள்ள 14 வட்டாரங்களில் பணிபுரியும் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். பேரணி கடலூர் நகர அரங்கில் தொடங்கி பாரதி சாலை வழியாக அண்ணா விளையாட்டரங்கில் நிறைவுற்றது.
இதில் மாவட்ட திட்ட அலுவலர் த.பழனி, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, செய்தி-
மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கூறியதாவது: கடந்த ஜூலை மாத கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாலின விகிதம் 911- லிருந்து 932-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை எட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினர் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த 6 ஸ்கேன் மையங்கள் மீதும், 4 போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். தமிழக அரசின் பெண் குழந்தைகளை போற்றும் திட்டங்களும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்க காரணமாக அமைந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com