பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்துக்கு எதிர்ப்பு: சிதம்பரத்தில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சிதம்பரத்தில் அனைத்துக் கட்சியினர், பல்வேறு விவசாய சங்கத்தினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 காவிரி மேலாண்மை வாரியம், காவிர் நீர் பங்கீட்டுக் குழு அமைக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தை கைவிட வேண்டும், பயிர்க் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து கட்சியினர், அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் மீது எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை. தமிழக அரசு ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் நீர் நிலைகளை தூர்வாருவதற்கு ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தப் பணிகளில் முறைகேடு நடைபெறுகிறது என்றார்.
 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் புவனகிரி தொகுதி எம்எல்ஏ துரை.கி.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, திமுக நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் முடிவண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பால.அறவாழி, நிர்வாகி பெரு.திருவரசு, திமுக பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன், விவசாய சங்கங்களின் தலைவர்கள் கே.வி.இளங்கீரன், கார்மாங்குடி வெங்கடேசன், பி.ரவீந்திரன், ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com