விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் அறிவிப்பு

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பூஜைக்கு வைக்கப்படும் விநாயகர் உருவச் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாகும். இது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கு மிகப்பெரிய கடமை உள்ளது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச் சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
 எனவே, பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான கிழங்குமாவு, மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
 நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும்.
 ரசாயன வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின்படி மாவட்டத்தில் உப்பனாறு ஆறு, தேவனாம்பட்டினம் (வெள்ளி கடற்கரை), கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு ஆறு ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 இந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு விழாவை கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com