4 நாள்கள் கடலில் மரணப் போராட்டம் நடத்திய கடலூர் மீனவர்கள்: குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு கதறல்

கடலூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று ஒக்கி புயலில் சிக்கிக் கொண்ட 3 மீனவர்கள், 4 நாள் மரணப் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
4 நாள்கள் கடலில் மரணப் போராட்டம் நடத்திய கடலூர் மீனவர்கள்: குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு கதறல்

கடலூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று ஒக்கி புயலில் சிக்கிக் கொண்ட 3 மீனவர்கள், 4 நாள் மரணப் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்திலிருந்து மீன்பிடி தொழிலுக்காக கன்னியாகுமரி, கேரளப் பகுதிகளுக்குச் சென்ற 24 மீனவர்களை காணவில்லையென அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதில், 10 பேர் மீட்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் பத்திரமாக இருப்பதாகவும், மீதமுள்ள 14 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கடலூர் தேவனாம்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த மீனவர்கள் வேலு (43), மண்ணாங்கட்டி (50), துரைராஜ் (44) ஆகியோர் மீட்கப்பட்டு கடம்பத் தீவில் இருப்பதாகவும், விரைவில் வீடு வந்து சேர்வதாகவும் அவர்களது உறவினர்களைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கடம்பத் தீவிலிருந்த மீனவர்கள் தங்களது மரணப் போராட்டம் குறித்து தொலைபேசி மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கடந்த மாதம் 28-ஆம் தேதி மீன் பிடித் தொழிலுக்காக கேரளத்துக்கு புறப்பட்டுச் சென்றோம். 29-ஆம் தேதி இரவு கொச்சி துறைமுகத்திலிருந்து நீண்ட தொலைவு சென்று மீன் பிடிக்கும் தங்கல் விசைப் படகில் புறப்பட்டோம். எங்களுடன் கேரள மாநிலத்தவர் 5 பேர், முட்டம் பகுதியினர் 4 பேர் என மொத்தம் 12 பேர் சென்றோம். எங்களது படகுடன் மேலும் ஒரு படகும் சேர்ந்துக் கொண்டது.

30-ஆம் தேதி இரவு ஒக்கி புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 25 நாள்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கத் தேவையான உணவுப் பொருள்கள், எரிபொருள் வைத்திருந்தோம்.

புயலின் சீற்றத்தால் மிகப் பெரிய அலைகள் எழும்பி, எங்களது படகை நிலைகுலையச் செய்தன. உடன் வந்த படகினர் "வாக்கி-டாக்கி' மூலம் எங்களுடன் தொடர்புகொண்டு, நாம் பயங்கர புயலில் சிக்கியுள்ளோம். உடனே அருகில் 50 கி.மீ. தொலைவில் உள்ள கில்டன் தீவுக்குச் சென்றுவிடுவோம் என்று கூறவே, பதற்றத்துடன் நாங்களும் அவர்களது படகை பின்தொடர்ந்தோம். முன்னால் சென்ற படகினர் கில்டன் தீவு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, ஆபத்தில் சிக்கியது குறித்து தகவல் தெரிவித்தனர். ஆனால், தற்போது நிலைமை சரியில்லை. மறு ஏற்பாடு செய்யும் வரை கடலிலேயே இருங்கள். கரைக்கு வந்தால் பாறைகளில் மோதி படகு சேதமடையலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஆனால் நேரம் செல்லச் செல்ல கடல் கொந்தளிப்பு அதிகரித்தது. படகுகள் கவிழும் நிலை ஏற்பட்டது. அதனால் முன்னால் சென்ற விசைப் படகிலிருந்த மீனவர்கள் உயிர் பிழைக்கும் நோக்கத்தோடு கில்டன் தீவை நோக்கிச் சென்றனர். ஆனால், படகு பாறைகளில் மோதி உடைந்து அதிலிருந்தவர்கள் கடலில் தத்தளித்தனர். அதற்குள் சிறிய படகுகளில் அங்கு வந்தவர்கள் அவர்களை மீட்டுச்சென்றனர்.

இதையடுத்து, கில்டன் தீவு அதிகாரிகள் எங்களுடன் "வாக்கி-டாக்கி' மூலம் தொடர்பு கொண்டு, கரைக்கு வராதீர்கள் என்று எச்சரித்தனர். நாங்கள் அவர்களிடம் எங்களைக் காப்பாற்றுமாறு கதறினோம். எங்களிடம் இருந்த செல்லிடப்பேசிகள் எதுவும் அப்போது செயல்படவில்லை.

"வாக்கி-டாக்கி'யும் இயங்காமல்போனது. பின்னர், 2 நாள்கள் படகில் மரணப் போராட்டத்தை சந்தித்தோம். அலைகளின் தாக்குதலால் பல முறை படகு கவிழும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே எங்களுடன் வந்த கிறிஸ்தவ மீனவர் ஒருவர், அவரது செல்லிடப்பேசியை முயற்சி செய்து இயங்க வைத்தார். அதன் மூலம் அவருக்கு தெரிந்த பாதிரியார் ஒருவரை தொடர்புகொண்டு உதவி செய்யுமாறு கோரினார். இதையடுத்து, அந்த பாதிரியார் மும்பை கடற்படையை தொடர்புகொண்டு தகவல் தெரிவத்தார். அடுத்த 8 மணி நேரத்தில், அதாவது டிச.3-ஆம் தேதி இரவு இந்திய கடற்படை கப்பல் எங்களை நோக்கி வந்தது. கப்பலை பார்த்தவுடன் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த கப்பல் கேப்டன் பலத்த காற்று வீசுவதைத் தடுக்கும் விதமாக, கப்பலை நிறுத்தி, காற்று வீசாதா மறுபக்கமாக எங்களை விசைப் படகை இயக்கச் செய்து 28 கி.மீ. தொலைவில் இருந்த கடம்பத் தீவில் எங்களை கரை சேர்த்தார்.

அங்கு உடனடியாக எங்களுக்கு மருத்துவ சிகிச்சை, உணவு அளிக்கப்பட்டது. அங்கிருந்து எங்கள் குடும்பத்தினரிடம் 5-ஆம் தேதி இரவு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். ஊர் திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து தந்துள்ளனர்.

இது எங்களுக்கு மறு பிறப்பாகும் என்று தெரிவித்தனர். கடம்பத் தீவு லட்சத் தீவுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com