வெலிங்டன் நீர்த் தேக்க கரையில் சேதம்: நிபுணர் குழுவுடன் ஆட்சியர் ஆய்வு

வெலிங்டன் நீர்த் தேக்கக் கரையில் ஏற்பட்ட சேதத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நிபுணர்கள் குழுவுடன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

வெலிங்டன் நீர்த் தேக்கக் கரையில் ஏற்பட்ட சேதத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நிபுணர்கள் குழுவுடன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
 திட்டக்குடி அருகே உள்ள கீழச்செருவாயில் வெலிங்டன் நீர்த் தேக்கம் அமைந்துள்ளது. இதன் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில் சுமார் 24 ஆயிரம் ஏக்கரும், நீர்த் தேக்கத்தின் 14 துணை வாய்க்கால்கள் மூலம் 14 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. 2016-ஆம் ஆண்டு ஏரிக்கரை புனரமைத்தல், மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.41 கோடி செலவில்
 இந்த நீர்த் தேக்கத்தின் கரை புனரமைக்கப்பட்டு, கரையின் இரு புறமும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டது. மேலும், கரையில் பொழியும் மழை நீர் வடிய வசதியாக வாய்க்கால் மற்றும் தார்ச் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை வெலிங்டன் நீர்த் தேக்கத்தின் கோனக் கரையின் ஒரு பகுதி, சுமார் 50 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியது. இதனால், விவசாயிகள், சுற்றுவட்டார கிராம மக்கள் கலக்கமடைந்தனர்.
 இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை வெலிங்டன் நீர்த் தேக்கத்துக்குச் சென்று விரிசல் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 அவருடன், சென்னையிலிருந்து வந்திருந்த பொதுப் பணித் துறை தரக் கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர்செல்வம், அணை புனரமைப்புத் திட்ட அலுவலர் குணசேகரன், உலக வங்கி ஆலோசகர் ருஸ்தாம் அலி ஆகியோரும் நீர்த் தேக்கத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: கரையோரங்களில் உள்ள பழுதுகளை தாற்காலிகமாக நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பழுதுகள் ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து வரப்பெற்றுள்ள நிபுணர்களின் ஆலோசனைப்படி கரையோரத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நிரந்தரமாக சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 இந்த நீர்த் தேக்கம் 24 மணிநேரமும் பொதுப் பணித் துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, நீர்த் தேக்கத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்தப் பழுதுகள் குறித்து அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு விரைவில் சரிசெய்யவும், நிரந்தரத் தீர்வு காண்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 இதையடுத்து, வெள்ளாற்றின் மூலம் வரும் தண்ணீரை தொழுதூர் அணைக்கட்டில் சேமித்து வைத்து, உபரி நீர் அணைக்கட்டின் மூலம் வெளியேற்றப்படுவதையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 இந்த ஆய்வின்போது விருத்தாசலம் பொதுப் பணித் துறை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.கண்ணன், விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, திட்டக்குடி வட்டாட்சியர் ப.சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 மீண்டும் உள்வாங்கிய கரைப் பகுதி....
 வெலிங்டன் நீர்த் தேக்கத்தில் திங்கள்கிழமை கோனக்கரையின் மேல்பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை கோனக்கரையிலிருந்து சில மீட்டர் தூரத்தில் அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு கரையின் உள்பகுதி உள்வாங்கியுள்ளது. இந்தப் பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com