பொங்கல் பண்டிகை: மஞ்சள், கரும்பு விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையையொட்டி, மஞ்சள் கொத்துகள், பன்னீர் கரும்புகள் ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை: மஞ்சள், கரும்பு விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையையொட்டி, மஞ்சள் கொத்துகள், பன்னீர் கரும்புகள் ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
 தமிழகத்தில், ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவைற்றை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன.
 கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் சுமார் 300 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு பயிரிடப்படும் மஞ்சள் கொத்தானது கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
 மஞ்சள் கொத்தானது, ரூ. 10 முதல் ரூ. 15 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல பன்னீர் கரும்புகளும் விற்பனைக்காக ஏற்றிச் செல்லப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் பத்திரக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 600 ஏக்கரில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, அரசு நியாய விலைக் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 அடி நீள கரும்புத் துண்டு வழங்கப்படுவதால், இந்தப் பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள், அரசுக்கு கரும்பை விற்பனை செய்துள்ளனர். அரசின் கொள்முதல் காரணமாக விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்துள்ளதாகவும், வியாபாரிகளும் நல்ல விலைக்கு கரும்புகளை வாங்கிச் செல்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
 பொங்கல் பண்டிகையின் மற்றொரு சிறப்பு புது பண்பானைகள். இந்த மண்பானைகள் தயாரிக்கும் பணியானது, கடலூர் வட்டம் சாவடி, குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணம், ஆடூர்அகரம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தன.
 பொங்கல் பண்டிகைக்காக தயாரான மண்பானைகள் கடந்த 5 நாள்களாக விற்பனையாகி வருகிறது. இவை ரூ. 30 தொடங்கி, அளவுக்கு ஏற்ற விலையில் விற்கப்படுவதாகத் மண்பாண்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
 நெய்வேலியில்...
 அதேபோல, நெய்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்துகள், பூக்கள், காய்கறிகள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருந்தன. கரும்பு ஜோடி ரூ. 20 முதல் 40 வரையிலும், மஞ்சள் கொத்து ரூ. 10, இஞ்சி கொத்து ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகளும் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டன. பூக்களின் விலை மட்டும் கூடுதலாக இருந்தது. பொதுமக்கள் இவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com