சரவணா நகர் இணைப்புச்சாலைத் திட்டம் தொடக்கம்: 20 ஆண்டுகால பிரச்னைக்கு அமைச்சரின் முயற்சியால் தீர்வு

கடலூர் மக்களின் 20 ஆண்டுகால பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் சரவணா நகர் இணைப்புச் சாலைக்கான திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

கடலூர் மக்களின் 20 ஆண்டுகால பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் சரவணா நகர் இணைப்புச் சாலைக்கான திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கடலூரில் சாலைகள் விரிவுப்படுத்தப்படவில்லை.
 கடலூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையே குறுகிய அளவில்தான் உள்ளது. இதனால், நெடுஞ்சாலையைத் தவிர மற்ற பகுதிகள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, திருப்பாதிரிபுலியூர்-திருவந்திபுரம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
 இதற்குத் தீர்வு காண வேண்டுமெனில் வண்டிப்பாளையத்தில் உள்ள சரவணா நகரையும் நத்தவெளிச் சாலையையும் இணைக்கும் வகையில் இணைப்புச் சாலை அமைக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
 40 அடி அகலம் கொண்ட இந்தச் சாலை இணைப்புக்காக 5 தனி நபர்களிடமிருந்து 31 ஆயிரம் சதுர அடி நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்தது. இந்த நிலையில் 2016 சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் தான் வெற்றிபெற்றால் சரவணா நகர் இணைப்புச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தார்.
 அவர் வெற்றி பெற்றதும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போதைய நகராட்சி ஆணையர் செ.விஜயகுமார் இதற்கான பணிகளில் தீவிரம் செலுத்தி சுமார் 24ஆயிரம் சதுர அடி நிலத்தைக் கையகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று பணியைத் தொடக்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாலை அமைப்பதற்குத் தேவைப்படும் 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மீதமுள்ள 7 ஆயிரம் சதுர அடி நிலம் கையகப்படுத்தும் பணியில் நகராட்சி ஆணையர் ஈடுபட்டுள்ளார். தற்போது இடத்தைச் சீரமைப்பு செய்வதற்கு ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சத்தில் இணைப்புச்சாலை அமைக்கப்படும்.
 எனினும், நத்தவெளிச் சாலையை பத்திரப் பதிவு அலுவலகம் வரையில் விரிவுப்படுத்தி கம்மியம்பேட்டை சாலையுடன் இணைக்கும் வகையில் ரூ. 2 கோடி அளவுக்குத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம். இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் போது கடலூர் நகருக்குள் வராமலேயே சென்னை, விழுப்புரம், சிதம்பரம் செல்ல முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com