சுகாதாரத் துறையில் 3 ஆயிரம் செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

சுகாதாரத் துறையில் 3 ஆயிரம் செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தியது.

சுகாதாரத் துறையில் 3 ஆயிரம் செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தியது.
 இந்தச் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அதன் மாநிலத் தலைவர் ஆர்.இந்திரா தலைமையில் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மாநிலப் பொதுச் செயலர் கு.அனுசுயா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எல்.அரிகிருஷ்ணன், முன்னாள் செயலர் என்.காசிநாதன், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ.ராமதாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 கூட்டத்தில், கிராம சுகாதார செவிலியர், துணைச் செவிலியர்களுக்கு நான்கு கட்டப் பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுமார் 3 ஆயிரம் செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 1982-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப பணி நியமனம் செய்யப்பட வேண்டும். துணைச் சுகாதார நிலையங்களுக்கு இலவசக் குடியிருப்பு, இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கான பதிவு முறையை எளிமைப்படுத்தும் விதமாக கணினிப் பதிவுகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், காலதாமதம் ஆகிறது. புதிய தொழில்நுட்பங்களை எவ்விதமான பயிற்சியும் அளிக்காமல் வழங்குகின்றனர்.
 எனவே, இவ்வாறான பதிவுகளை மேற்கொள்ள தனியாக கணினி இயக்குபவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் வருகிற ஜூலை 24-ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது, மேலும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு 18-ஆம் தேதி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, சென்னையில் ஆகஸ்டு 5-ஆம் தேதி நடைபெறும் பேரணியில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 முன்னதாக, மாவட்டத் தலைவர் ஆர்.முத்தமிழ்ச்செல்வி வரவேற்க, மாநிலப் பொருளர் பி.பாத்திமாமேரி நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com