தந்தை விட்டுச் சென்ற பெண் குழந்தை மீட்பு
By சிதம்பரம், | Published on : 18th July 2017 08:15 AM | அ+அ அ- |
சிதம்பரம் அருகே இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால், அரசு மருத்துவமனையில் தந்தை விட்டுச் சென்ற குழந்தையை போலீஸார் மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம், பி.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (30). மதுபான பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (28). இவருக்கு கௌசல்யா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மீண்டும் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு கௌசிகா என்று பெயர் வைத்துள்ளனர். இதனிடையே, இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்துவிட்டதால், செந்தாமரைக்கண்ணன் 2 மாதக் குழந்தையை சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சீர்காழியைச் சேர்ந்த உஷா என்ற பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு, மருத்துவமனையில் தனது முகவரியைக் கொடுத்துவிட்டு குழந்தையைத் தேடி உரியவர்கள் வந்தால் முகவரியைக் கொடுக்கவும் எனக் கூறி சென்றுள்ளார்.
இந்த நிலையில், குழந்தையைக் காணவில்லை என்று பிரியா மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிதம்பரம் தனிப்படைப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனசேகர், தலைமைக் காவலர் திலீப் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு சீர்காழியில் உஷாவிடமிருந்த பெண் குழந்தையை மீட்டு, தாய் பிரியாவிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் தந்தை செந்தாமரைக்கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.