அங்குசெட்டிப்பாளையம் ஏரியில் 15 அடி ஆழத்துக்கு மண் அள்ளுவதாகப் புகார்

பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் 15 அடி ஆழத்தில் மணல் அள்ளப்படுவதாக

பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் 15 அடி ஆழத்தில் மணல் அள்ளப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
 அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 56 ஏக்கரில் பூவரசன்ஏரி உள்ளது.
 இந்த ஏரியில் தேக்கப்படும் நீரின் மூலம் சுற்றுவட்டாரக் கிராமங்கள் பாசன வசதியைப் பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 தற்போது ஏரியின் ஒரு பகுதியைச் சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர். இதற்கிடையே, ஏரியில் வண்டல் மண் எடுத்து தூர்வார தமிழக அரசு அனுமதி அளித்தது.
 இதனைப் பயன்படுத்திக் கொண்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் ஏரியின் கரையோரப் பகுதியில் செங்கல் சூளைக்குப் பயன்படும் மண்ணாக பார்த்து 10 முதல் 15 அடி ஆழம் வரை ஆங்காங்கே மண்ணை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்து கேள்வியெழுப்புபவர்களை மிரட்டி வருகின்றனர்.
 தற்போது ஏரியில் ஒரு பகுதியானது சுமார் 15 அடி ஆழம் வரையில் பள்ளமாகவும் மற்றொரு பகுதி மேடாகவும் காட்சியளிக்கிறது. இதனால் அரசின் தூர்வாரும் நடவடிக்கை பயனளிக்காத நிலைக்குச் சென்றுள்ளது.
 மழைக் காலத்தில் ஏரியில் தண்ணீர் தேங்கினால் அதிலுள்ள பள்ளத்தில் சிக்கி மனிதர்கள், கால்நடைகள் உயிரிழப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
 அரசு எந்த நோக்கத்துக்காக வண்டல் மண் அள்ளுவதற்கு உத்தரவிட்டதோடு அந்த நோக்கம் மீறப்பட்டு வருகிறது.
 எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com