ஆசிரியர்களை நியமிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கடந்த 18 ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர், நிரந்தரஆசிரியர்கள் இல்லாமல் இயங்கி வரும் அரசுப் பள்ளிக்கு நிரந்தர தலைமை ஆசிரியரை நியமிக்கக் கோரி, பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடந்த 18 ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர், நிரந்தரஆசிரியர்கள் இல்லாமல் இயங்கி வரும் அரசுப் பள்ளிக்கு நிரந்தர தலைமை ஆசிரியரை நியமிக்கக் கோரி, பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வத்தராயன்தெத்து கிராம மக்கள் வீரமணி, கீதா, சங்கீதா, ஆனந்தன், குணாநிதி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வத்தராயன்தெத்து கிராமத்தில் 1999-ஆம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தற்போது 60 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
 கடத்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தப் பள்ளிக்கு நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், தாற்காலிக ஆசிரியர்களை நியமித்தே பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வளையாமாதேவி பள்ளியின் ஆசிரியர் தாற்காலிகப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி தொடங்கப்பட்டதில் இருந்தே தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
 இதுபோல, பள்ளிக் கட்டடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. சுற்றுச் சுவரும் இல்லாததால் பள்ளி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இவற்றையும் உடனடியாகச் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
 மனு அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கூறியதாவது: பள்ளிக்கு நிரந்தர தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும், பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்கக் கோரியும் மனு அளித்துள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com