என்.எல்.சி. சுரங்கம் முற்றுகை: ஒப்பந்தத் தொழிலாளர்கள் 460 பேர் கைது

நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்கம் 1-ஏ பகுதியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் 460 பேரை நெய்வேலி நகரிய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்கம் 1-ஏ பகுதியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் 460 பேரை நெய்வேலி நகரிய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலத்தை வழங்கியவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் ஆவர்.
 இவர்களுக்கு மாதத்துக்கு 26 நாள்கள் பணி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சுரங்கம் 1-ஏ பகுதியில் பணியாற்றி வந்த எஸ்எம்டி பிரிவு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு திடீரென பணி நாள்கள் 19 நாள்களாகக் குறைக்கப்பட்டது.
 இதைக் கண்டித்து, கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்த நிலையில், சனிக்கிழமை எச்சரிக்கைப் பேரணியை நடத்தியவர்கள், என்.எல்.சி. தலைமை அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர், திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். அதன்படி, திங்கள்கிழமை காலை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுரங்கம் 1-ஏ பகுதியில் திரண்டனர்.
 ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் எம்.சேகர் தலைமையில் சுரங்க வாயிலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தொடக்கிவைத்தார். போராட்டத்தில் பல்வேறு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட
 460 பேரை போலீஸார் கைது செய்துனர். கைது செய்யப்பட்டவர்கள் அருகில் இருந்த சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
 உணவு உண்ண மறுப்பு: முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு காலை, மதிய உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால், தொழிலாளர்கள் உணவு உண்ண மறுத்து உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிலையில், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் எம்.சேகர் தலைமையில், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
 பின்னர், அவர் இதுகுறித்து தொழிலாளர்களிடம் விளக்கிப் பேசினார். இதையடுத்து, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
 ஒப்பந்தத் தொழிலாளர்களின் முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு, சுரங்கம் 1-ஏ பகுதியில் நெய்வேலி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com