மாணவியை கேலி செய்ததால் இரு தரப்பினரிடையே மோதல்: 10 பேர் காயம்

கடலூர் அருகே பள்ளி மாணவியை கேலி செய்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

கடலூர் அருகே பள்ளி மாணவியை கேலி செய்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
 கடலூர் ரெட்டிச்சாவடி அருகே உள்ளது கீழ்குமாரமங்கலம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கடலூரிலுள்ள பள்ளிக்குப் பேருந்தில் சென்றபோது, அவரை அதே பேருந்தில் பயணிக்கும் சிலர் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை மாணவியை கிண்டல் செய்ததை அவரது அண்ணன் தட்டிக் கேட்டுள்ளார்.
 இதனால், பேருந்தினுள் இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் அதன் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
 இதில், ஒரு தரப்பினர் அந்தப் பகுதியிலுள்ள வீடுகளின் மீது கற்களை வீசி சூறையாடினர். இந்தத் தாக்குதலில் மாணவி உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.
 இதையடுத்து, மாணவியின் தரப்பினர் தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி, கீழ்குமாரமங்கலம் - கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் க.நரசிம்மன், ஆய்வாளர்கள் சீனிபாபு, க.சரவணன் உள்ளிட்டோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் முற்றுகையிட்டனர்.
 அதேபோல, மாநில பாமக துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமையில் அந்தக் கட்சியினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரச்னை தொடர்பாக மனு அளித்தனர். அதில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தனர்.
 கட்சிகள் மீது புகார்: பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய அளவிலான பிரச்னையை சாதி பின்னணிக் கொண்ட அரசியல் பிரச்னையாக மாற்றும் முயற்சிகள் கடலூர் மாவட்டத்தில் அனைத்துப் பிரச்னைகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் மீது காவல் துறை உயர் அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கை எடுத்து பிரச்னையை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com