பயிர்களைச் சேதப்படுத்தும் வன விலங்குகள்: கிருஷ்ணாபுரம் காப்புக்காட்டில் கம்பி வேலி அமைக்கக் கோரிக்கை

வன விலங்குகள் பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்க கிருஷ்ணாபுரம் காப்புக்காட்டில் முள்கம்பி வேலிஅமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வன விலங்குகள் பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்க கிருஷ்ணாபுரம் காப்புக்காட்டில் முள்கம்பி வேலிஅமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மானாவாரி பயிர்களான மணிலா, எள், பருத்தி, மக்காச்சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
நாங்கூர், புலிகரம்பலூர், சிறுப்பாக்கம் உள்பட சுமார் 20 கிராமங்களைச் சுற்றிலும் பல ஆயிரம் ஏக்கரில் அரசுக்குச் சொந்தமான கிருஷ்ணாபுரம் காப்புக்காடு உள்ளது. இந்த வனப் பகுதியில் மான், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, மயில்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குள் வசித்து வருகின்றனர்.
இவை குடிநீருக்காகவும், மேய்ச்சலுக்காகவும் அருகில் உள்ள கிராமங்களில் விளை நிலங்களுக்குள் புகுவதால், பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், கோடைக்காலத்தில் குடிநீர் தேடிவரும் மான்கள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
ஊருக்குள் நுழையும் வன விலங்குகள் விளை நிலங்களில் புகுந்து மானாவாரி பயிர்களை மேய்ந்துவிடுவதால் விவசாயிகள் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. இதனால், விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் தினமும் இரவு நேரங்களில் காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க வனத்தை ஒட்டி அகழிகள், முள் கம்பி வேலிகள், சோலார் மின் கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என வனத் துறைக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com