ரமலான் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது

கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது புனித ரமலான் பண்டிகையாகும். திங்கள்கிழமை ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். புத்தாடைகள் அணிந்தும், இனிப்புகளை பரிமாறியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ரமலான் பண்டிகையையொட்டி, பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கடலூர் மஞ்சக்குப்பம், துறைமுகம் பெரிய பள்ளிவாசல், புதுப்பாளையம், கூத்தப்பாக்கம், திருப்பாதிரிபுலியூர் உள்பட நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கூட்டுத் தொழுகையும் நடத்தப்பட்டது.
நெல்லிக்குப்பத்தில் முஸ்லிம்கள் சின்னத்தெரு பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கொத்பா பள்ளியை அடைந்தனர். அங்கு சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நவாப்ஜாமி ஆ மஸ்ஜித் ஈத்வா மைதானத்தில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. இதில் 9 பள்ளிவாசல்களைச் சேர்ந்த முத்தவல்லிகள் பங்கேற்றனர். இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள 194 பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
சிதம்பரம்: ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் மற்றும் ஆயங்குடியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் உள்ள ஈக்தா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் சுமார் 2 ஆயிரம் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
இதேபோல காட்டுமன்னார்கோவில் அருகே ஆயங்குடியில் ஈக்தா மைதானத்தில் அப்துல்ஜபார் பைஜி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
நெய்வேலி: நெய்வேலி, புதுநகர், 19- ஆவது வட்டம் மெளலானா அபுல்கலாம் ஆசாத் ஈத்கா திடலில் என்எல்சி முஸ்லிம் ஜமாத் சார்பில் அமைந்துள்ள 7 பள்ளிவாசல்களின் ஒருங்கிணைந்த கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
பண்ருட்டி: பண்ருட்டி அன்வர்ஷா ஈத்கா தர்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். முன்னதாக காந்தி சாலையில் உள்ள பெரிய தர்காவான நூர்முகமது ஷா அவுலியா தர்காவில் இருந்து ஊர்வலமாக வந்தவர்கள், கடலூர் சாலையில் உள்ள அன்வர்ஷா ஈத்கா மைதானத்தில் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். இதில், தர்கா நிர்வாகத் தலைவர் தாஜூதீன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சிறுபான்மையின பொதுச் செயலர் எஸ்.டி.சம்சுதீன், ஜாகீர் உசேன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com