"நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து தொடர் போராட்டம்: கி.வீரமணி அறிவிப்பு

"நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தப்படுமென திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூறினார்.

"நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தப்படுமென திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூறினார்.
 மருத்துவப் படிப்புக்கான "நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில், சென்னை, தருமபுரி, கோயமுத்தூர், தென்காசி, கடலூர் ஆகிய 5 இடங்களிலிருந்து இரு சக்கர வாகன பிரசார பயணம் மார்ச் 18-ஆம் தேதி தொடங்கியது. பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் செவ்வாய்க்கிழமை விருத்தாசலத்தில் தங்களது பயணத்தை நிறைவு செய்தனர்.
 இதனைத் தொடர்ந்து, அங்குள்ள வானொலித் திடலில் இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தி.க. இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன் தலைமை வகித்தார்.
 இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்றுப் பேசியதாவது: "நீட்' நுழைவுத் தேர்வு என்பது, கல்வியில் தற்போது முன்னேறி வருகின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை வஞ்சிக்கும் செயலாகும். இந்தியா முழுமைக்கும் ஒரே வகையான கல்வித் திட்டம், ஒரே வகையான வகுப்பறைகள் இல்லாத போது, ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எப்படிச் சாத்தியமாகும்?
 காஷ்மீர், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏன் "நீட்' தேர்வு நுழைவுத் நடத்தப்படுவதில்லை? மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழிருந்த கல்விக் கொள்கை, நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது, பொதுப் பட்டியலுக்குச் சென்றுவிட்டது. அதில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்பதில்லை. அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்படுவதை எதிர்த்துத் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
 திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலர்கள் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com