சிறுவத்தூர் அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை, குடிநீர்த் தொட்டி திறப்பு

சிறுவத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம், குடிநீர்த் தொட்டி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

சிறுவத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம், குடிநீர்த் தொட்டி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ், பண்ருட்டி ஒன்றியம், சிறுவத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.32 லட்சம் செலவில் 4 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ரூ.6 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் மேல்நிலை குடிநீர்த் தொட்டியை திறந்து வைத்தார். மேலும், இந்தத் தொட்டியை தொடர்ந்து பராமரித்திட வேண்டும் என பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வசந்தாவிடம் கேட்டுக்கொண்டார்.
 பின்னர், விக்ரமன் பேசுகையில், கடந்த நிதியாண்டில்
 என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுப் பணிகளுக்காக ரூ.38 கோடியை செலவிட்டுள்ளது. நிகழ்வாண்டும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1,200 கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டன என்றார்.
 பின்பு, கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றையும் ஆர்.விக்ரமன் பார்வையிட்டார்.
 விழாவில், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன், என்எல்சி சமூகப் பொறுப்புணர்வுத் துறையின் தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன், பொது மேலாளர் ஜே.பீட்டர் ஜேம்ஸ், பள்ளி தலைமையாசிரியை எம்.உமா, ஆசிரியர் ராஜ்குமார், சிறுவத்தூர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com