பணி விவகாரம்: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மாக் பணி விவகாரத்தில் ஊழியர்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக ஒரு தரப்பினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் பணி விவகாரத்தில் ஊழியர்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக ஒரு தரப்பினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 191 டாஸ்மாக் மதுபானக் கடைகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் படிப்படியாக மூடப்பட்டு கடைகளின் எண்ணிக்கை 65-ஆக குறைக்கப்பட்டது. இதனால் ஏராளமான கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் பணியிழப்புக்கு உள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் பேரில் தற்போது செயல்பட்டு வரும் கடைகளில்  கூடுதல் பணியாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
 அதன்படி கடலூர் கம்மியம்பேட்டையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் ஏற்கனவே 5 பேர் பணியாற்றும் நிலையில், கூடுதலாக 4 பேரை மாவட்ட மேலாளர் அண்மையில் நியமித்துள்ளார். இதற்கான ஆணையை கடையின் கண்காணிப்பாளரிடம் வழங்கியபோது அவர் ஏற்க மறுத்து விட்டாராம்.   எனவே 4 பேருக்கும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கு.சரவணன் தலைமையில் நிர்வாகிகள் கடைக்குச் சென்றனர். அங்கிருந்த விற்பனையாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கண்காணிப்பாளர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறினராம். கடந்த 5 நாள்களாக இதே நிலை நீடிப்பதால் சங்கத்தினர் கடையின் முன்பக்க கதவினை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து கு.சரவணன் கூறுகையில், இதே நிலை தான் மாவட்டம் முழுவதும் நீடிக்கிறது. மாவட்ட மேலாளர் பணிநியமனம் வழங்கியும் அங்கு பணி வழங்க கடை கண்காணிப்பாளர் மறுப்பதை ஏற்க முடியாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றார்.  விற்பனையாளர்கள் எஸ்.சங்கர், டி.மோகன், டி.ராஜேஷ், பி.சிவாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com