பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்: சிஐடியூ மாநிலத் தலைவர்

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டுமென சிஐடியூ மாநிலத் தலைவர் செளந்தர்ராஜன் நெய்வேலியில் சனிக்கிழமை கூறினார்.

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டுமென சிஐடியூ மாநிலத் தலைவர் செளந்தர்ராஜன் நெய்வேலியில் சனிக்கிழமை கூறினார்.
நெய்வேலியில் சிஐடியூ நிர்வாகக் குழு கூட்டம், தொழிற்சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிஐடியூ மாநிலத் தலைவர் செளந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும், அரசு மதுபானக் கடைகளை அகற்றுவதிலும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுரங்கப் பணிகளுக்காக கனரக இயந்திரங்களை மத்திய அரசு அனுமதியுடன் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்தோம்.
தற்போது அவுட் சோர்சிங் முறையை அமல்படுத்தி, தனியாருக்கு மேல் மண் நீக்கப் பணி வழங்குவதால் சுமார் 2 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், பலருக்கு வேலை நாள்கள் குறைக்கப்பட்டுள்ளது. என்எல்சி நிர்வாகம், தொழிலாளர்களைப் பாதிக்கும் அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 தொழிலாளர்கள் மீது நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையைக் கைவிட வேண்டும். மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் முயற்சிகளைக் கைவிட்டு, ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
வீடு, நிலங்களைக் கொடுத்தவர்களுக்கும், பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் காலிப் பணியிடங்களைக் கணக்கீட்டு, உடனடியாகப் பணி வழங்க வேண்டும். சீர்காழியில் அமைய இருந்த அனல் மின் நிலையத்தை ஒரிஸா மாநிலத்துக்கு மாற்றியதால், தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்த இடமாற்றம் குறித்து, என்எல்சி நிறுவனத்தின் தலைவரிடம் சிஐடியூ சார்பில், கேள்வி எழுப்பப்படும் என்றார் அவர். மாநிலச் செயலர் சுகுமாறன், மாவட்டச் செயலர் பி.கருப்பையன், என்எல்சி சிஐடியூ நிர்வாகிகள் வேல்முருகன், ஜெயராமன், குப்புசாமி, சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com