950 ஏக்கரில் நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்: வடிகால்களை தூர்வாரக் கோரி மனு

சிதம்பரம் அருகே பலத்த மழை காரணமாக 950 ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள், சவுக்கு நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளதால், வடிகால்களை உடனடியாக

சிதம்பரம் அருகே பலத்த மழை காரணமாக 950 ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள், சவுக்கு நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளதால், வடிகால்களை உடனடியாக தூர்வாரக் கோரி கிராம மக்கள்  கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
கடந்த ஒரு வாரமாக சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட வயலாம்பூர், சின்னாண்டிக்குழி உள்ளிட்ட கிராமங்களில் முறையான வடிகால் வசதி இல்லாததால், நெல் பயிர்கள், சவுக்கு நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. எனவே வடிகால் வாய்க்கால்களை தூர் வார வேண்டும் எனக் கோரி, பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் இரு கிராம மக்களும் சிதம்பரம் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: சின்னாண்டிக்குழி கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பில் நெல் பயிர்களும், 40 ஏக்கர் பரப்பில் சவுக்கு நாற்றுகளும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மொத்தம் ரூ.1.5 லட்சம் மதிப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல, வயலாம்பூர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வீடுகளும் இடிந்துள்ளன.
வடிகால்களை முறையாக தூர்வாராததே பயிர்கள் பாதிப்புக்கு காரணம். குறிப்பாக வயலாம்பூரில் வடிகால் வாய்க்கால் தூர் வாரப்படவில்லை. இதனை முறையாக தூர்வாரியிருந்தால், வயல்களில் நீர் தேங்கியிருக்காது. பக்கிங்காம் கால்வாயை முறையாக தூர்வாரியிருந்தால் சின்னாண்டிக்குழி கிராமத்தில் நெல் வயல்களில் நீர் தேங்கியிருக்காது.
எனவே, உடனடியாக கால்வாய்களில் மராமத்து பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com