வடிகால் வசதிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி நிதி எங்கே? எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

கடலூர் மாவட்ட வடிகால் பணிகளுக்காக  ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி நிதி குறித்த தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டுமென கிழக்கு மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ வலியுறுத்தினார்.

கடலூர் மாவட்ட வடிகால் பணிகளுக்காக  ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி நிதி குறித்த தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டுமென கிழக்கு மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
இதுகுறித்து கடலூரில் அவர் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழையால் கடலூர் மாவட்டம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், அமைச்சர் எம்.சி.சம்பத் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிதம்பரம், கடலூர், சீர்காழி, ஆணைக்காரன் சத்திரம் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர் மழையால் விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டத்தில் பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. கடலூர்- ஆத்தூர் சாலை, வேப்பூர் - விருத்தாசலம் சாலை ஆகியவை மழைக்கு தாங்குப்பிடிக்க முடியாமல் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இந்தச் சாலைகள் தரமில்லாமல் அமைக்கப்பட்டுள்ளன.
 கடலூர், உப்பலவாடி உள்ளிட்ட பகுதிகளிலும், கிராமப் புறங்களிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஓட்டேரி கிராமத்துக்குச் செல்லும் ஆற்றுப்பாலம் துண்டிக்கப்பட்டு மக்கள்
அவதிப்படுகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்தவித வேலையும் செய்யவில்லை.
கடலூர் மாவட்டத்தில் மழைக் காலத்தில் தண்ணீர் வடிவதற்காக வடிகால் வசதி ஏற்படுத்த ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது, அந்த தொகை என்ன ஆனது என்பதை மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். இது குறித்து ஆய்வு செய்வதற்காக  விவசாயிகள், பொதுமக்கள் கொண்ட குழுவை அமைத்து, கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள  வேண்டும்.   கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையின் சித்தா பிரிவுக் கட்டடம் பழுதடைந்த நிலையில் மின்கசிவு ஏற்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com