என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.37 கோடியில் நகரும் கன்வேயர் இயந்திரம்

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு, ரூ.36.80 கோடியில் வாங்கப்பட்ட நகரும் கன்வேயர் இயந்திரத்தை, நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா திங்கள்கிழமை இயக்கி வைத்தார்.

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு, ரூ.36.80 கோடியில் வாங்கப்பட்ட நகரும் கன்வேயர் இயந்திரத்தை, நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா திங்கள்கிழமை இயக்கி வைத்தார்.
 கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கங்களில், ராட்சத மண்வெட்டும் இயந்திரங்கள் மூலம் மண் வெட்டி எடுக்கப்பட்டு, கன்வேயர் வழியாக கொண்டு செல்லப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் கொட்டப்படுகிறது.
கன்வேயர் அமைப்பு, மண்வெட்டும் இயந்திரத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்துக்குள் இருந்தால் மட்டுமே கன்வேயரில் மண்ணை கொட்ட முடியும். இதற்காக, மண்வெட்டும் இயந்திரத்தை நோக்கி கன்வேயர் நகர்த்தப்படும். இந்தச் சமயத்தில் உற்பத்தியும் தடைபடும்.
 திங்கள்கிழமை இயக்கி வைக்கப்பட்ட நகரும் கன்வேயர் இயந்திரம், ஒரு மணி நேரத்தில் சுமார் 1.56 லட்சம் கனஅடி மண்ணை கன்வேயரில் கொட்டும் திறன்கொண்டது. சுமார் 64 மீட்டர் நீளம் கொண்ட இந்த இயந்திரம், கன்வேயர் அமைப்பை நகர்த்தாமல் மேலும் 64மீ அளவுக்கு பக்கட்வீல் இயந்திரத்தை இயக்க வழிவகை செய்யும். இதன்மூலம் நில மட்டத்திலிருந்து 18மீ உயரம், கீழே 5மீ வரை மண்ணைப் பெறவோ, கொட்டவோ முடியும்.
 538 டன் எடை கொண்ட இந்த இயந்திரத்தை ரூ.36.80 கோடி செலவில், ஜெர்மனி நாட்டின் டேக்ராப் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் சென்னை, டெனோவா இந்தியா நிறுவனம் நிர்மாணித்துள்ளது. மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், மாறுகின்ற மின் அதிர்வு, மாறுகின்ற மின் அழுத்தம் என்ற புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 நெய்வேலி, மந்தாரக்குப்பம் 2-ஆவது சுரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா இந்த இயந்திரத்தை இயக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இயந்திரத்தை நிர்மாணிக்க நிர்ணயிக்கப்பட்ட கால இலக்கிற்கு, 8 மாதங்களுக்கு முன்பே பணிகளை நிறைவு செய்ததாக, டெனோவா உள்ளிட்ட நிறுவன ஊழியர்களைப் பாராட்டினார். மொத்தம் 3 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பக்கட்வீல், ஸ்பிரடர் இயந்திரம் ஆகியவற்றை நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2-ஆவது அனல் மின் நிலையத்தில் பழுப்பு நிலக்கரி கையாளும் பகுதியில் பயன்படுத்த ஒரு ஸ்டேக்கர் இயந்திரமும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
 நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிதித் துறை இயக்குநர் ராக்கேஷ் குமார், சுரங்கத் துறை இயக்குநர் சுபீர்தாஸ், மின் துறை இயக்குநர் வி.தங்கப்பாண்டியன், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் பி.செல்வக்குமார், மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி டி.வெங்கடசுப்ரமணியன், செயல் இயக்குநர்கள் எஸ்.எ.எப். காலித், ராஜசேகர், சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com