பண்ருட்டி பகுதியில் கந்துவட்டிக் கொடுமை: ஆட்சியரிடம் புகார்

பண்ருட்டி பகுதியில் கந்துவட்டிக் கொடுமை அதிகளவில் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் 2 தம்பதியர் தனித் தனியாக திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.

பண்ருட்டி பகுதியில் கந்துவட்டிக் கொடுமை அதிகளவில் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் 2 தம்பதியர் தனித் தனியாக திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பண்ருட்டி வட்டம், மேலிருப்பு ஊராட்சியைச் சேர்ந்த சிவலிங்கம் (58)-தவமணி தம்பதியர், கந்து வட்டி கொடுமையால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றபோது தரையில் அமர்ந்தனர். இதையடுத்து, காவல் ஆய்வாளர் த.சரவணன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இவர்கள், அதே பகுதியைச் சேர்ந்தவரிடம் கடந்த 2011-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதில், ரூ.1.85 லட்சம் வரை திருப்பிச் செலுத்தியதோடு, தங்களது 40 சென்ட் நிலத்தையும் அடமானமாக எழுதிக் கொடுத்துள்ளனராம்.
தற்போது அந்த நிலத்தை தர மறுப்பதோடு, கூடுதலாக ரூ.1.80 லட்சம் தர வேண்டுமென மிரட்டல் விடுத்து வருவதாக புகாரில் தெரிவித்திருந்தனர். இந்தத் தம்பதியர் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க, விஷ பாட்டிலுடன் வந்திருந்தனர். அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த நாளிதழ் நிருபர் ஒருவர், அவர்களிடம் விசாரித்து  விஷம் அருந்த முயற்சியைத் தடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 மேலும், இதேபோல பண்ருட்டி வட்டம், கரிக்கை காலனியைச் சேர்ந்த நா.சந்திரன் (48) தனது மனைவியுடன் மனு அளித்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நாங்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் 2002-ஆம் ஆண்டில் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றோம். 2015-ஆம் ஆண்டு வரை ரூ.1.05 லட்சம் செலுத்திய நிலையில் மேலும், ரூ.90 ஆயிரம் தர வேண்டுமெனவும், அதற்குப் பதிலாக குடியிருந்து வரும் வீட்டைச் சுற்றியுள்ள 12 சென்ட் நிலத்தையும் எழுதித்தர வேண்டுமென மிரட்டி வருவதாக புகார் தெரிவித்தார்.
 பண்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் அதிகமாக
புகார்கள் வரப்பெறுவதால் ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com