புத்தகத் திருவிழாவில் அறிவியல் நூல்களுக்கு அதிக வரவேற்பு

கடலூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், அறிவியல் நூல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக நூல் வெளியீட்டாளர்கள் தெரிவித்தனர்.

கடலூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், அறிவியல் நூல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக நூல் வெளியீட்டாளர்கள் தெரிவித்தனர்.
 பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் கடலூர் நகர அரங்கில் தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா கடந்த 10-ஆம் முதல் நடைபெற்று வருகிறது. இதில், 40 புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்று, குழந்தைகள் தொடர்பான சுமார் 1 லட்சம் புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
 பள்ளி மாணவ, மாணவிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவில் தற்போது பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். மேலும், மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் தொடர்பான விளக்கங்களை அளித்திடும் வகையில் கோளரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு வெளியில் நடைபெறும் முதல் தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா என்ற பெருமையை கடலூர் புத்தகத் திருவிழா பெற்றுள்ளது.
 இதில், பங்கேற்ற ஸ்பைடர் புக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எம்.குமார் கூறியதாவது: சென்னைக்கு வெளியில் கிராமப்புற பின்னணிக் கொண்ட கடலூரில் புத்தகத் திருவிழா என்றதும் பதிப்பகத்தார் முதலில் தயங்கினோம். ஆனால், இங்கு வரும் மக்களின் எண்ணிக்கையைப் பார்த்து எங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டோம். இங்கு வரும் மாணவ, மாணவிகள் அறிவியல் தொடர்பான புத்தகங்களை அதிகமாக வாங்கிச் செல்வதோடு, அது குறித்து அதிக கேள்விகளும்
எழுப்புகின்றனர். மேலும், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், விநாடி-வினா புத்தகங்களை அதிகமாக வாங்கிச் செல்கின்றனர் என்றார் அவர்.
 சக்ஸஸ் புக் செல்லர் நிறுவன உரிமையாளர் பி.சீனிவாசன் கூறியதாவது: புத்தகத் திருவிழாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் காலங்களில் இன்னும் அதிகமான பதிப்பகத்தார் பங்கேற்கும் வகையில் விசாலமான இடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டும் என்றார்.
 சென்னை புத்தக நிலையத்தார் கூறியதாவது: கடலூரில் 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற நெய்தல் கோடை விழாவில் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றது மோசமான அனுபவமாக இருந்தது. அதனை தற்போதைய கண்காட்சி மாற்றி அமைத்துள்ளது. அப்துல்கலாம் குறித்து அதிகமான மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர் என்றார்.
திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், கடலூர் சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் பங்கேற்றுப் பேசுகையில், குழந்தைகள் புத்தகம் படிக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர், முதலில் தாங்களே படிக்க வேண்டும் என்றார்.

புத்தகத் திருவிழாவில் இன்று
காலை 10 மணிக்கு 50 மாணவர்களின் புத்தக அறிமுக சிறப்பு நிகழ்வும், மதியம் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், மாலையில் சிறந்த சிறார் இலக்கியப் படைப்பாளர்களுக்கு விருது வழங்குதல், சாகித்ய அகாதமி விருதாளர் சா.கந்தசாமி பங்கேற்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com