மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்தக் கோரிக்கை

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜா.ராஜா, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதில் ஏற்படும் இடற்பாடுகளை களைந்திட வேண்டுமென தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அதனடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், மாதந்தோறும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களும், கோட்ட அளவில் கோட்டாட்சியர்களும் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக குறைதீர் முகாம்களை நடத்த வேண்டும். குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கோட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான மாவட்ட சிறப்பு துணை ஆட்சியர், வட்டாட்சியர்கள், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவுகளை கடலூர் மாவட்டத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதன்படி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக குறைதீர் நாள் கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.
 சங்கச் செயலர் ஆர்.ஆளவந்தார், பொருளாளர் ராம.நடேசன், துணைத் தலைவர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com