கரையான்குட்டை பிரச்னை: ஆட்சியர் ஆய்வு

கரையான்குட்டை பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கரையான்குட்டை பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
 மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே கரையான்குட்டை உள்ளது. இதன் அருகிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த இந்தக் குட்டையானது, தற்போது கழிவுநீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு காரணமாக, தொற்றுநோய் பரவும் சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, குட்டையை தூர்வார வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
 அதன்படி, அண்மையில் குட்டையை தூர்வாருவதற்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில், குழாய் பதிப்பதற்கு மற்றொரு பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இவ்வாறு இருதரப்பினரும் மனு அளித்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கரையான்குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரை நிரந்தரமாக வெளியேற்ற வேண்டுமென மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
 இதையடுத்து, நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பெண்கள் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகத்துவாரத்தில் மழை நீர் தேங்குவதால், சிறிய நடைபாதை அமைக்கவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.ஆர்.ஜவஹர்லால், பண்ருட்டி வட்டாட்சியர் விஜய்ஆனந்த், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் எஸ்.மகாராஜன், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com