கற்றல் திறனைப் பரிசோதிக்க பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆட்சியர்

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில், அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை பாடம் நடத்தினார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில், அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை பாடம் நடத்தினார்.
 கடலூர் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 அப்போது, மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில் அவர்களை தமிழ், ஆங்கிலப் பாடங்களை படிக்கச் சொல்லி, தவறின்றி வாசிக்கிறார்களா என்பதை கேட்டறிந்தார். பின்னர், கணிதப் பாடம் தொடர்பாக பெருக்கல் கணக்கை கரும்பலகையில் எழுதியவர், அதற்கான விடையை மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார். சரியான விடையளித்தவர்களை ஆட்சியர் பாராட்டினார். மேலும், தினந்தோறும் நடத்தப்படும் பயிற்சித் தேர்வு முடிவுகளைப் பார்வையிட்டவர், அதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கவனத்துக்கொண்டு சென்று, அதற்குரிய பதிவு நோட்டில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். பின்னர், திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படும் பாடத் திட்டங்களை ஆய்வு செய்தார்.
 அதனைத் தொடர்ந்து, கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியர், வருகைப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்னர், 7-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கற்றல் திறமையை பரிசோதனை செய்யும் வகையில் பாடங்களை படிக்கச் சொல்லி கேட்டறிந்தார். மேலும், தேர்ச்சி விகிதப் பதிவேடுகளைப் பார்வையிட்டவர், தேர்ச்சியை அதிகரிக்க மாணவர்களுக்கு பாடங்களை புரியும் வகையில் கற்றுத்தர வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
 பின்னர், சமையல் கூடம், குடிநீர் சேமித்து வைக்கும் தொட்டி ஆகியவற்றைப் பார்வையிட்டவர், குடிநீர்த் தொட்டியை தினந்தோறும் சுத்தம் செய்து குளோரினேஷன் செய்ய வேண்டும். பள்ளியின் சுற்றுப்புறங்களில் கிடக்கும் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கினார்.
 ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால், பண்ருட்டி வட்டாட்சியர் விஜய்ஆனந்த், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் எஸ்.மகாராஜன், தலைமையாசிரியர்கள் எஸ்.ஹேமலதா, கோ.ஜோசப்ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com