மாணவர்களுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடிய போலீஸார்

சிதம்பரம் நகரில் பள்ளி மாணவர்களுடன் காவல் துறையினர் குழந்தைகள் தின விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.

சிதம்பரம் நகரில் பள்ளி மாணவர்களுடன் காவல் துறையினர் குழந்தைகள் தின விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
 சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகரில் உள்ள வீனஸ் பள்ளி, காமராஜ் பள்ளி, ஆறுமுகநாவலர் பள்ளி, நந்தனார் அரசுப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை தனி பேருந்து மூலம் நகர காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அங்கு, அவர்களுக்கு இனிப்பு, பிஸ்கட் மற்றும் பலூன்களை காவல் துறையினர் வழங்கி வரவேற்றனர். பின்னர் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
 அப்போது அவர் பேசியதாவது: பள்ளிக்கு பெற்றோருடன் வாகனங்களில் வரும்போது கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய மாணவர்கள் வலியுறுத்த வேண்டும்.
 பள்ளி வாகன ஓட்டுநர்கள், வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசினால், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பேசுமாறு வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என ஏஎஸ்பி கூறினார்.
 பின்னர், நகர போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயக்குமார், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகள் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அறைகள், எழுத்தர் அறை, சிறை மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பார்வையிட்டனர்.
 நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் குமார், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணவேணி, உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com