அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள் உண்ணாவிரதம்

செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கக் கோரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் 

செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கக் கோரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பல்கலைக்கழக வளாகம் பூமா கோயில் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். இதில், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து முழக்கமிட்டனர். மாதந்தோறும் கடைசி வேலைநாளன்று ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வை வழங்க வேண்டும். பணிநிரவலை குறித்த காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும். தொகுப்பூதியம், தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
 ஆசிரியர்கள், ஊழியர்கள் ஓட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைக்கழக பணிகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டன. ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் உதயசந்திரன், சிவகுருநாதன், பூங்கோதை, சி.சுப்பிரமணியன், முத்துவேலாயுதம், பாஸ்கர், செல்வராஜ், புருஷோத்தமன், தனசேகரன், கணேசன், ஜெய்சங்கர், தெய்வசிகாமணி, ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பழனிவேல், வேல்ராஜ், தவச்செல்வன், இமயவரம்பன், ஓய்வூதியர் சங்கம் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். உண்ணாவிரதத்தை காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி முடித்து வைத்து பேசினார்.
 உண்ணாவிரதத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை (அக்.6) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
 உடனடியாக ஊதியம் வழங்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
 சென்னை, அக்.5: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
 இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஊழியர்களும் வியாழக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
 பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மாத ஊதியம், அந்த மாதத்தின் கடைசி வேலை நாளன்று வழங்குவதில்லை. ஒவ்வொரு மாத சம்பளமும் அடுத்த மாத இறுதியிலோ அல்லது அதற்குப் பிறகோ வழங்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது.
 பெரும்பாலான ஊழியர்கள் தீபாவளி கொண்டாடக்கூடிய இந்த மாதத்தில்கூட, இதுவரை செப்டம்பர் மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தின் இந்தச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
 எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கடந்த மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட மாதத்தின் கடைசி நாளன்று சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com