டெங்குவை கட்டுப்படுத்த அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணி

டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்களுக்கான தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்களுக்கான தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
 தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமைதோறும் வீடுகள், அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டு, தண்ணீர் தேங்கக் கூடிய பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது.
 அதன்படி வியாழக்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏடிஸ் கொசுப் புழுக்களை அழிக்கும் வகையில், உபயோகமற்ற பொருள்களை அப்புறப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், அங்கு பணியாற்றும் அரசு அலுவலர்களுடன் இணைந்து தூய்மைப் பணி நடைபெற்றது.
 அப்போது, அலுவலகத்துக்கு வருகிற பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அலுவலகத்தின் உள்புறம், வெளிப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இந்தப் பணிகளை வாரந்தோறும் வியாழக்கிழமை மேற்கொள்ள வேண்டும்.
 அலுவலக வளாகத்தில் உள்ள உபயோகமற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டுமென ஆட்சியர் கேட்டுக்கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊழியர்கள் சுகாதார உறுதிமொழி ஏற்றனர்.
 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்த்ராஜ், கடலூர் நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால், வட்டாட்சியர்கள் ப.பாலமுருகன், எஸ்.சிவா மற்றும் சுகாதாரத் துறையினர் பங்கேற்றனர்.
 மக்கள் இயக்கமாக மாறுமா?
 நல்ல நீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்ட ஏடிஸ் வகை கொசுக்களை அழிக்கும் பணியானது பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே வெற்றியடையும். எனவே, ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு கொசுப்புழு (லார்வா) ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் இயக்கமாக மாற்றி, அதனை தீவிரமாக செயல்படுத்த வேண்டிய பணி மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது. இந்தப் பணியில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை இணைத்து மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com