வள்ளலாரின் 195-ஆவது அவதார நாள் விழா

வடலூரில் வள்ளலாரின் 195-ஆவது அவதார தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

வடலூரில் வள்ளலாரின் 195-ஆவது அவதார தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 புலால் உண்ணாமை, பசிப்பிணி போக்குதல், ஜோதி வழிபாட்டை வலியுறுத்தி வந்த ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம், மருதூர் கிராமத்தில் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி பிறந்தார். பின்னாளில் அவர் சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை தொடங்கி, அதன் கொள்கைகளைப் பரப்பி வந்தார்.
 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார், பசியால் வாடுவோர் உணவருந்திச் செல்வதற்காக வடலூரில் தரும சாலையையும், சத்திய ஞான சபையையும் தொடங்கினார். தரும சாலையில் அணையா அடுப்பு மூலம் உணவு தயாரிக்கப்பட்டு சபைக்கு வருவோருக்கும், ஆதரவற்றோருக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. வள்ளலார் பிறந்த 195-ஆவது அவதார தின (வருவிக்கவுற்ற நாள்) வடலூர் திருஅருள்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காலையில் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. வடலூர் சத்திய தரும சாலையில் சன்மார்க்க கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல, வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. ஞான சபையில் சிறப்பு வழிபாடு, திருஅருள்பா இன்னிசை நிகழ்ச்சி, சன்மார்க்க சொற்பொழிவுகள் நடைபெற்றன. வடலூர் சத்திய தரும சாலை, மருதூர் இல்லத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், சன்மார்க்க அன்பர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com