நல்லூர், மங்களூர், திட்டக்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் நல்லூர், மங்களூர், திட்டக்குடி பகுதிகளில் பொதுப் பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவை சார்பில்

கடலூர் மாவட்டத்தில் நல்லூர், மங்களூர், திட்டக்குடி பகுதிகளில் பொதுப் பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
 கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு அதன் நிலைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
 அதன்படி, புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச் சாலையைப் பார்வையிட்டு அதன் இருபுறமும் கொட்டப்பட்ட மண்ணை சமன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
 பின்னர், மருதாடு முதல் வெள்ளப்பாக்கம் வரை சாலையின் இருபுறமும் கரையைப் பலப்படுத்தி மண்ணைச் சரி செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, விசூர் ஓடையில் ரூ. 14.60 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவரைப் பார்வையிட்டு பணிகளை வடகிழக்கு பருமழைக்கு முன்பாக விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதன் பின்னர், நல்லூர் வட்டம் முருகன்குடி கிராமத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 1.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், அப்பகுதியில் தானே சிறப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்டுள்ள வீடுகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
 மேலும், கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருந்துகள் இருப்பு, விநியோகம் செய்த விவரங்கள், பதிவேடுகளை ஆய்வு செய்தார். அங்கிருந்த பெண்களிடம் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ், மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
 பின்னர் ரூ. 11.95 கோடியில் பெண்ணாடம் - செüந்தரசோழபுரம் தார்சாலை அமைக்கும் பணியைப் பார்வையிட்டார். தொடர்ந்து, திட்டக்குடி வட்டம் கீழ்செருவாய் வெலிங்டன் ஏரி, அதன் உபரி நீர் வெளியேறும் தடுப்பணை, ராமநத்தம் ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் அம்மா பூங்கா கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
 மங்களூர் ஊராட்சி ஒன்றியம், தொழுதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுகாதார ரதத்தை தொடக்கி வைத்தார்.
 தொழுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கற்றலின் திறமை குறித்து கேட்டறிந்தார். பின்னர், புலிகரம்பலூரில் ரூ. 1.5 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் பண்ணை குட்டைப் பணி, ரூ. 1.7 லட்சத்தில் கட்டப்படும் வீடு ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்த்ராஜ், விருத்தாச்சலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, வட்டாட்சியர்கள் பன்னீர்செல்வம், சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.ரேவதி, ஜெயக்குமார், ஜி.பூராசாமி, உதயசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com