மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோரக் கிராமங்களுக்கு எச்சரிக்கை

மணிமுக்தாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், வருவாய்த் துறை சார்பில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிமுக்தாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், வருவாய்த் துறை சார்பில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 விழுப்புரம் மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக கல்வராயன் பகுதியில் உள்ள கோமுகி அணை நிரம்பியது. இதையடுத்து, அணையிலிருந்து புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 16,444 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
 இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மற்றொரு அணையான மணிமுத்தாறும் நிரம்பியதால் அந்த அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
 கூடுதலாக, விருத்தாசலம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக விருத்தாசலம் அருகே உள்ள மேமாத்தூர் அணைக்கட்டு நிரம்பி புதன்கிழமை காலை முதல் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 வெள்ளப் பெருக்கின் காரணமாக நல்லூர் - இளங்கியனூர் இடையே இருந்த தரைப்பாலம், விருத்தாசலம் அருகே பரவளூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலமும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
 இந்த நிலையில், பிற்பகல் 2 மணி நிலவரப்படி, கோமுகி அணையிலிருந்து 15,112 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விருத்தாசலம் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
 தரைப்பாலம் சேதம்...
 மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நல்லூர் - இளங்கியனூர் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 10 கிராம மக்கள் அவதியுற்றனர். கடலூர் மாவட்டத்தில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்று மணிமுக்தாறு. ஆறுக்கான நீர்பிடிப்புப் பகுதியான கச்சிராபாளையம் கோமுகி அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், புதன்கிழமை காலையில் திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
 அதிகப்படியான தண்ணீர் ஆற்றில் வந்ததால் நல்லூர் - இளங்கியனூர் இடையே உள்ள தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியடைந்தனர்.
 மேலும், நல்லூர் - இளங்கியனூரை இணைக்கும் வகையில் மேம்பாலக் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருள்கள் வெள்ளப் பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டதாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com