கல்லணையிருந்து கீழணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கீழணைக்கு வந்தடையாத நிலையில், கடலூர் மாவட்ட விவசாயிகள் காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லணையிருந்து கீழணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கீழணைக்கு வந்தடையாத நிலையில், கடலூர் மாவட்ட விவசாயிகள் காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கூடுதல் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மேட்டூர் அணையில் திறக்கப்படும் பாசன நீரானது ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களைக் கடந்து கல்லணைக்கு வந்து சேரும். கல்லணையில் இருந்து தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு காவிரி, கல்லணைக்கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளின் மூலமாக தண்ணீர் செல்லும். கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தின் வடக்கு பாசனப் பகுதி, அரியலூர் மாவட்டத்தில் டி. பழூர் ஒன்றியத்தில் சுமார் 4,500 ஏக்கர் விளை நிலங்களுக்கும் கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு நீர் திறப்பது வழக்கம். கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியைத் தொடர்ந்து தற்போது தென்மேற்கு பருவ மழையின் மூலம் மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. நிகழாண்டு சம்பா சாகுபடி பணிகளுக்கு கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு, அக்டோபர் 5-ஆம் தேதி கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணையில் எவ்வளவு வந்தடைகிறதோ அதில் 10 சதவீதம் தண்ணீர் கொள்ளிடம் வழியாக கீழணைக்கு திறக்கப்படும் நடைமுறை வழக்கமாக உள்ளது. கடந்த 83 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் இந்த நடைமுறை கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்ற கருத்து நிலவுகிறது. காரணம், கல்லணைக்கும், கீழணைக்கும் இடைப்பட்ட ஆற்றுப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஏ.பி.ரவீந்திரன் தெரிவித்ததாவது: கொள்ளிடம் ஆற்றில் 30-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கியதால் மணல் அள்ளிய பள்ளங்கள் அனைத்தும் நிரம்பிய பிறகே தண்ணீர் வந்தடைய வேண்டும்.

மேலும், நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுவதால் ஆற்றின் மூலம் தண்ணீர் எளிதில் வந்தடைவதில்லை. இதுபோன்ற காரணங்களால் கொள்ளிடத்தில் வழங்கப்படும் தண்ணீரில் பாதி அளவே கீழணையை வந்தடைகிறது. மேலும், 2005-ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையைப் நிறைவு செய்யும் விதமாக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்குப் பிறகும் கீழணைக்கு 10 சதவீதம் தண்ணீர் விநியோகம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.

கீழணைக்கு கடந்த 5-ஆம் தேதி 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்தாலும், 650 கன அடி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. 10-ஆம் தேதி முதல் 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக பொதுப்பணித் துறை புள்ளி விவரம் வழங்குகிறது.

ஆனால், 11-ஆம் தேதி அன்று மாலை வரை 60 கி.மீ. தொலைவைக் கூட ஆற்றில் தண்ணீர் தாண்டவில்லை. இந்த நிலையில் கீழணை பாசன பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூடுதல் தண்ணீரை கேட்டுப் பெறாதது வேதனைக்குரியது.

கீழணையின் மூலம் கடலூர் மாவட்டத்தில் வடவார் பாசன வாய்க்கால், வீராணம் ஏரி, வடக்கு ராஜன் வாய்க்கால், கஞ்சன்கொல்லை வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், பாசிமுத்தான் ஓடை, விநாயகன் தெரு வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் ஒரு லட்சத்து 6,000 ஏக்கர் விளை நிலங்களுக்கும்,

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் 1,500 ஏக்கர் விளை நிலங்களுக்கும், நாகை மாவட்டத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால், கீழராமன், மேலராமன் ஆகிய வாய்க்கால்கள் மூலம் 22,408 ஏக்கர் விளை நிலங்களுக்கும் பாசன நீர் விநியோகிக்க வேண்டும்.

சம்பா சாகுபடி பணிகளானது மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி தொடங்குவது வழக்கம். நிகழாண்டில் தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டதாலும், ஒருபோக சாகுபடிக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாலும் அதிக வருவாய் தரக்கூடிய நெல் விதைகளை பெரும்பாலான விவசாயிகள் ஆகஸ்ட் மாதம் இறுதி வாரம் முதல் நேரடி விதைப்பு செய்துவிட்டார்கள். செப்டம்பர் மாதத்தில் அவ்வப்போது பெய்த மழையால் விதைகள் முளைத்தபோதும் தட்ப வெப்ப மாற்றம் காரணமாக பூச்சி தாக்குதல் ஏற்பட்டது.

இதற்காக இளம் பயிர்களில் மருந்து அடித்த நிலையில், தற்போது போதிய மழை இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. பயிர்களை காப்பாற்ற கீழணையில் இருந்து உடனடியாக அதிக தண்ணீர் திறக்க வேண்டும்.

கீழணைப் பாசனம் நீங்கலாக மற்ற காவிரி பாசன மாவட்டங்கள் அனைத்தும் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடலூர் மாவட்ட பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் கீழணையானது சென்னை மண்டல தலைமைப் பொறியாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், திருச்சி மண்டல பொதுப்பணித் துறை அதிகாரிகள் தாங்கள் அளிக்க வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்காமல் கடலூர் மாவட்ட விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர். எனவே, கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகளின் நலன், பயிர்களை காக்க தமிழக அரசு கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு 2,500 கன அடி வீதம் தொடர்ந்து 7 நாள்களுக்கு பாசன நீர் விநியோகிக்க வேண்டும்.

சிதம்பரம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி கீழணையில் தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு அனுமதி கோரியிருப்பது கூடுதல் கால தாமதத்தை ஏற்படுத்தும். கடந்த 3 ஆண்டுகளாக சாகுபடி பொய்த்துப்போன நிலையில் நிகழாண்டு சாகுபடியை உறுதி செய்யும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி கூடுதல் தண்ணீரை கேட்டுப் பெற்று கீழணை, வீராணம் ஏரியை உடனடியாக திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஏ.பி.ரவீந்திரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com