சிவகாமசுந்தரி அம்மன் கோயில் உற்சவம் நவ.3-இல் தொடக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகங்கை குளக்கரையின் மேற்கு கரையில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத பூரச்சலங்கை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகங்கை குளக்கரையின் மேற்கு கரையில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத பூரச்சலங்கை உற்சவம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
 திருக்காமக் கோட்டம் என்றழைக்கப்படும் இந்தக் கோயில் உற்சவத்தை முன்னிட்டு, 2-ஆம் நாளில் (நவ.4) சந்திரபிரபை வாகனத்தில் அம்மன் வீதிஉலா, 3-ஆம் நாளில் பூதகி வாகனம், 4-ஆம் நாளில் சிம்ம வாகனம், 5-ஆம் நாளில் ரிஷப வாகனம், 6-ஆம் நாளில் காமதேனு வாகனம், 7-ஆம் நாளில் கைலாச வாகனம், 8-ஆம் நாளில் குதிரை வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெறுகிறது.
 விழாவின் 9-ஆம் நாளான நவ.11-ஆம் தேதி (சனிக்கிழமை) திருத்தேர் உற்சவமும், 12-ஆம் தேதி பட்டு வாங்கும் உற்சவமும், தொடர்ந்து பூரச்சலங்கை உற்சவமும்,  13-ஆம் தேதி  காலை தபசு உற்சவமும், இரவில் சிவானந்தநாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. உற்சவத்தில் இரு வேளைகளிலும் அம்பாள் 4 வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பட்டு வாங்கும் உற்சவம்: நவ.12-ம் தேதி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு சபை சன்னதியில் உலகப் பரம்பொருள்  நடராஜரிடம் முதன் முதலில் பட்டு (ஆசீர்வாதம்) வாங்கும் நிகழ்வும், தொடர்ந்து 4 பிரகாரங்கள், வீதிகளில் அனைவரும் பட்டு (பாவாடை) சாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் சுண்டல் நிவேத்தியம் செய்து மக்களுக்கு விநியோகிப்பார்கள் . மறு நாள் திருக்கல்யாண நாளன்று காலை ஸ்ரீசிவானந்தநாயகி அம்மன் தபசுக்கு சென்று மாலையில் கீழவீதி தேரடியில் ஓட்டம் பிடித்து விளையாடும் நிகழ்ச்சியும், மாலை மாற்றல், கன்னூஞ்சல், பூர்வாங்க கலச பூஜை, காப்பு கட்டுதல், சிறப்பு  ஹோமம், திருமாங்கல்ய தாரணம் நடைபெறும். தொடர்ந்து சிவானந்த நாயகி சமேத சோமாஸ்கந்தமூர்த்தி (தம்பதிகளிடம்) ஆசி பெறுதல், மக்களுக்கு ஆசி வழங்குதல், பிரசாதம், அன்னதானம்  வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com