வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டம் கடல் மட்டத்தை விட தாழ்வாக இருப்பதாலும், பல்வேறு மாவட்டங்களின் வடிகாலாக உள்ளதாலும் இங்கு வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தென்பெண்ணையாற்றில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித் துறை மூலமாக ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அமைச்சர்கள், கண்காணிப்பு உயர் அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக 13 கடலோர மாவட்டங்களிலும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
 கடலூர் மாவட்டத்தில் 2015-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு ஏரி, குளங்களின் கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பலவீனமான அரசுக் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்தக் கட்டடங்களில் இயங்கும் அலுவலகங்களை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வரவேற்று, மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கினார்.  
கூட்டத்தில் அரசின் முதன்மைச் செயலர் கே.சத்யகோபால், வருவாய்த் துறை அரசு செயலர் பி.சந்திரமோகன், மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com