ஆணவக் கொலை வழக்கு முக்கிய சாட்சி மர்மச் சாவு: உறவினர்கள் போராட்டம்

விருத்தாசலம் அருகே ஆணவக் கொலை வழக்கில் முக்கிய சாட்சி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அவரது உறவினர்கள், அரசியல் கட்சியினர் காவல் நிலையம்,

விருத்தாசலம் அருகே ஆணவக் கொலை வழக்கில் முக்கிய சாட்சி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அவரது உறவினர்கள், அரசியல் கட்சியினர் காவல் நிலையம், கோட்டாட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
 கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25), பொறியியல் பட்டதாரி. இவர் அதேப் பகுதியில் வசித்து வந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகியை (22) காதலித்து 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த நிலையில், இருவரும் 2003-ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஷம் ஊற்றி கொலை செய்யப்பட்டு, அவர்களது சடலங்கள் எரிக்கப்பட்டன. இந்த ஆணவக்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ நடத்தி முடித்து, வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 இந்த நிலையில், வழக்கின் முக்கிய சாட்சியான அதேப் பகுதியைச் சேர்ந்த மா.செல்வராசு (48) அப்பகுதியில் வியாழக்கிழமை மாலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் வழியிலேயே செல்வராசு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கஸ்தூரி (38), விருத்தாசலம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 செல்வராசுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் செல்வராசுவின் உறவினர்கள் காவல் நிலையம், விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு: இந்த வழக்கின் விசாரணை கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பி.தனபால் முன்னிலையில் கடந்த 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை சாட்சிகள் விசாரணை தொடங்கிய நிலையில், சாட்சிகளில் ஒருவரான செல்வராசு இறந்தது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை வருகிற 6-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com