மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.9.41 லட்சத்தில் நல உதவி: எம்பி வழங்கினார்

கடலூரில் ரூ.9.41 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்களை ஆ.அருண்மொழிதேவன் எம்.பி. வெள்ளிக்கிழமை வழங்கினார்.

கடலூரில் ரூ.9.41 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்களை ஆ.அருண்மொழிதேவன் எம்.பி. வெள்ளிக்கிழமை வழங்கினார்.
 கடலூர் மக்களவை உறுப்பினரின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.9.41 லட்சம் மதிப்பில் 16 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகிக்க, கடலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் மோட்டார் சைக்கிள்களை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்), சத்தியா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கடலூர் சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 எம்பியுடன் வாக்குவாதம்: இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சி குறித்து அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, மழுப்பலான பதிலையே எம்பி தெரிவித்தார்.
 முன்னதாக, அமைச்சரை அழைக்காமல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது தொடர்பாக அவரது ஆதரவாளர்களான முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தெய்வ.பக்கிரி, ஒன்றிய துணைச் செயலர் ஏழுமலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சி.வேதநாதன், நகராட்சி கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் எம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது, திட்ட இயக்குநர் அதிமுகவினரைப் பார்த்து, நீங்கள் யார் இதையெல்லாம் கேட்க என்று கேட்டுள்ளார். இதற்கும் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com