உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றால் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்: அமைச்சர் எம்.சி.சம்பத்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றால் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றால் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பாதிரிபுலியூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர்
கோ.ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் கே.முருகுமணி, பேரவைச் செயலர் பி.ரவிச்சந்திரன், மகளிரணிச் செயலர் டி.நாகரத்தினம், தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், விவசாயப் பிரிவு செயலர் கே.காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்தில் மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று பேசியதாவது: அண்ணா தனது பேச்சாற்றலால் திராவிட இயக்கத்தை வளர்த்தார். சீர்திருத்த திருமணச் சட்டத்தை கொண்டு வந்ததோடு, தமிழ் மொழிக்காகவும், ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்தார். தமிழகத்தில் தற்போது ஜெயலலிதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நீடிக்கும்.
2018-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில், பல்வேறு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு ரூ.3 லட்சம் கோடிக்கு முதலீடு செய்வார்கள். இதனால் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான நடவடிக்கையை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் சிந்தனைகள், அவர் விட்டுச் சென்ற பணிகள் தொடர முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை நிலைநிறுத்த வேண்டும். சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேரில் 32 பேர் பங்கேற்றனர். இதன் மூலமாக கிழக்கு மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பது உறுதியாகியுள்ளது என்றார் அவர்.
பொதுக்கூட்டத்தில், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஜி.ஜெ.குமார், ஒன்றியச் செயலர் ஜெ.முத்துகுமாரசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் வி.கந்தன், ஆர்.வி.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக நகரச் செயலர் ஆர்.குமரன் வரவேற்க, ஒன்றியச் செயலர் ராம.பழனிச்சாமி நன்றி கூறினார்.
பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்த நிர்வாகி: பொதுக்கூட்டத்துக்கு தலைமை வகித்த கோ.ஐயப்பன், கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவரது ஆதரவாளர்களும் அவருடன் சென்றனர். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஐயப்பனின் இந்த புறக்கணிப்பானது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com