வாய்க்காலில் வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவு

கடலூர் சிப்காட் பகுதியிலுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் ரசாயனக் கழிவுகள் திறந்து விடப்படுவதாக பொதுநல அமைப்பு குற்றம் சாட்டியது.

கடலூர் சிப்காட் பகுதியிலுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் ரசாயனக் கழிவுகள் திறந்து விடப்படுவதாக பொதுநல அமைப்பு குற்றம் சாட்டியது.
இதுகுறித்து சிப்காட் பகுதி சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் துறைமுகம் தைக்கால் தோணித் துறை அருகில் உள்ள தனியார் தொழில்சாலை வளாகத்திலிருந்து அண்மையில் 2 பம்புகள் மூலமாக சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவுநீர் மழைநீர் வடிகால் வாய்க்கலில் சட்ட விரோதமாக வெளியேற்றப்பட்டது.
அந்த வாய்க்காலின் இருபுறமும் சுமார் 100 அடி தூரத்துக்கு கழிவுநீர் பரவியிருந்தது. இந்த தண்ணீர் கருப்பாகவும், மேல்பரப்பில் எண்ணெய் படிவம் போல ரசாயனம் மிதந்ததோடு துர்நாற்றமும் வீசியது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு வந்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் பொறியாளர் சம்பந்தப்பட்ட தொழில்சாலையை பார்வையிட்டார். மழைநீர் வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். எனினும், கழிவுநீரை ஆய்வுக்காக எடுக்காததோடு, கழிவுகளை வெளியேற்றிய நிறுவனம் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
வரும் மழைக் காலத்தில் மழைநீரோடு சேர்ந்து இந்தக் கழிவுகளையும் நிறுவனங்கள் வாய்க்காலில் வெளியேற்றும் நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சிப்காட் வளாகத்திலுள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும் கழிவுநீரை வெளியேற்றிய நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com