நீதிபதிகள் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

நீதிபதிகள் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

நீதிபதிகள் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் நீதிமன்ற கட்டட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். பின்பு அவர் பேசியதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க பரங்கிப்பேட்டையில், 100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீதிமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த நீதிமன்றம் ரூ.2.86 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதி மக்கள் வழக்குகளுக்கு மாவட்ட தலைமையிடமான கடலூருக்குச் செல்லும் நிலை மாறி, பரங்கிப்பேட்டையிலேயே தீர்வு காண முடியும். நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும். நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை நீண்ட நாள் நிலுவையில் வைக்காமல், உடனுக்குடன் அவற்றை விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார்.
விழாவில் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் 41 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் 38 நீதிமன்றங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன. எஞ்சிய 3 நீதிமன்றங்களும் சொந்தக் கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். மக்களுக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் 223 புதிய நீதிமன்றக் கட்டடங்கள் திறக்க உத்தரவிடப்பட்டதில், 150 நீதிமன்றக் கட்டடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 196 புதிய நீதிமன்றங்கள் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு ஆணையிட்டது. இதில் 125 நீதிமன்ற கட்டடப் பணிகள் முடிந்துள்ளன. குறிஞ்சிப்பாடியில் இந்த ஆண்டு நீதிமன்றம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. 20 மகளிர் குடும்பநல நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்தத் துறையில் கடந்த 8 மாதங்களில் 3,400 பணியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ரூ.5.25 லட்சம் சேமநல நிதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார் என்றார் அவர்.
தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று பேசுகையில், பரங்கிப்பேட்டையில் 1918-ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்டுள்ள இந்த நீதிமன்ற வளாகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் என்றார்.
முன்னதாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பி.தனபால் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார், பரங்கிப்பேட்டை வழக்குரைஞர்கள் ஆர்.தியாகராஜன், ஆர்.சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், கடலூர் மாவட்ட (பொறுப்பு) நீதிபதியுமான ஆர்.சுப்பையா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வேலூர் சரக பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் எம்.பிரேம்சந்தர் திட்ட அறிக்கை படித்தார். கடலூர் மாவட்ட சார்பு-நீதிபதி எம்.பரமேஸ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com