உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: விவசாயிகள் வரவேற்பு 

உளுந்து பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.54 என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

உளுந்து பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.54 என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 கடலூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேரில் நேரடியாகவும், ஊடுபயிராகவும் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும், விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை எனவும், உளுந்துக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
 கடந்த 2016-ஆம் ஆண்டுகளில் உளுந்து 100 கிலோ கொண்ட குவிண்டால் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால், கடந்த ஆண்டு ரூ.6,500-க்கு மட்டுமே விற்பனையானது.
 தற்போது உளுந்து அறுவடை தொடங்கியுள்ள நிலையில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு உளுந்து வரத்து அதிகரித்துள்ளது. எனினும், கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே வியாபாரிகளால் விலை கேட்கப்பட்டு வாங்கி செல்லப்படுகிறது.
 எனவே, உளுந்துக்கு உரிய ஆதரவு விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
 அதன்படி உளுந்து கொள்முதலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, தமிழகத்திலிருந்து 3 ஆயிரம் மெட்ரிக் டன் வரை சஅஊஉஈ திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்திட மத்திய அரசு அனுமதித்துள்ளது.
 இதற்காக ஆதரவு விலைத் திட்டத்தின் மூலமாக ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 அதன்படி, மாவட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இரண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.5,400 ஆக நிர்ணயித்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ.54 ஆகும்.
 எனவே, விவசாயிகள் விற்பனைக்கு உளுந்தை கொண்டு வருவதற்கு முன்பாக தங்களது விவரத்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்த பின்னர் அழைப்பு வரும் தேதியன்று விற்பனைக்கு கொண்டுவந்து, விற்பனை செய்து அதற்கான தொகையை வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.
 ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விற்பனைக்கான பதிவுக்கு வரும்போது விவசாயிகள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதார் அட்டை நகல், செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்த விவசாயிகளது உளுந்து விற்பனைக்கு கொண்டுவரப்படும் நாளில் அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏற்ப, தரத்துக்குள்பட்டு கொள்முதல் செய்யப்படுமென ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அரசால் உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com