பாதைப் பிரச்னை: ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி 

பாதைப் பிரச்னை தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பாதைப் பிரச்னை தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக, கடலூர் வட்டம், நொச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வீர.தங்கபாண்டின் வந்திருந்தார். இவர், தனது தந்தை, சகோதரர்கள், அவர்களது மனைவிகள், குழந்தைகள் உள்பட 16 பேருடன் வந்திருந்தார்.
 மனுவைப் பதிவு செய்துவிட்டு அலுவலகத்துக்குச் செல்லும் முன் திடீரென வீர.தங்கபாண்டியன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றினார். பின்னர், குழந்தைகள் உள்பட தனது குடும்பத்தினர் 16 பேர் மீதும் பெட்ரோலை ஊற்றினார். இதையடுத்து குழந்தைகள் கதறி அழுதன. வீர.தங்கபாண்டியன் தீப்பெட்டியை எடுத்து தீயைப் பற்ற வைக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு தீப்பெட்டியை பறித்தனர். பின்னர், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, தீக் குளிக்கும் முயற்சியை தடுத்தனர். பின்னர், வீர.தங்கபாண்டியனிடமிருந்து மனு பெறப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்களது மூதாதையர் வழியில் கிரையமாகப் பெறப்பட்ட 1.35 ஏக்கர் நிலத்தில் அண்ணன், தம்பிகள் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். வீட்டுக்கும், பொதுச் சாலைக்கும் சென்று வர அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தைப் பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த இடத்தை தனியாருக்குப் பட்டாவாக வழங்கியதால் எங்களுக்கு பாதை மறுக்கப்படுகிறது. இதனால், நாங்கள் பொதுச் சாலைக்கு சென்று வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து 2016-ஆம் ஆண்டிலிருந்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com