மணல் குவாரிக்கு எதிர்ப்பு: திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் 2-ஆவது நாளாக முற்றுகை 

மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் முற்றுகையிடப்பட்டது. 

மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் முற்றுகையிடப்பட்டது.
 திட்டக்குடி அருகே உள்ள தி.இளமங்கலம் - கீழ்செருவாய் இடையே வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க பொதுப் பணித் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, சிலர் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் ஆற்றில் மணல் அள்ளி விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பதாகப் புகார் எழுந்தது. இதனால் தங்களது பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும், குடிநீர் ஆதாரம், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறி அந்தப் பகுதி மக்கள் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், வெள்ளாற்றில் தடுப்பணை கட்டவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 திங்கள்கிழமை பாமக, தவாக, அமமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சியினர், வணிகர்கள் சங்க பேரவைக் கூட்டமைப்பு சார்பில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
 இதே விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலருமான சி.வெ.கணேசன் தலைமையில், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா, மமக, வணிகர் சங்கம், விவசாய சங்கங்கத்தினர் இணைந்து திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 அப்போது, மணல்குவாரி திறப்பை தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாகவும், பொதுமக்களுடன் கலந்துபேசி அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்தார். இதையடுத்து கட்சியினர் கலைந்துச் சென்றனர்.
 இதுகுறித்து எம்எல்ஏ சி.வெ.கணேசன் கூறுகையில், மணல் குவாரி அமைக்கக் கூடாது என்பதே எங்களின் நோக்கம். இதை திறப்பதற்கான முயற்சியை மேற்கொண்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com