தேசிய மக்கள் நீதிமன்றம்: 4,745 வழக்குகளுக்குத் தீர்வு

கடலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 4,745 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு,


கடலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 4,745 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, உரியவர்களுக்கு சுமார் ரூ.30.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, புதுதில்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்துதலின்படி, கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சார்பில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கடலூர் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், பொதுமக்களின் மனுக்கள் அந்தந்த நீதிமன்ற வளாகங்களில் பல அமர்வுகளில் விசாரிக்கப்பட்டு, பல வழக்குகளில் சுமூக தீர்வு காணப்பட்டது.
கடலூரில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி, தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்துப் பேசினார். இந்த நிகழ்வில், கடலூர் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் மொத்தம் 11,123 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 4,395 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.28,16,19,792 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. பொதுமக்களின் மனுக்கள், வங்கிகள் மற்றும் அதன் கடனாளிகளுக்காக நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்கள் வாயிலாக மொத்தம் 4,297 வழக்குகள் பல அமர்வுகளில் விசாரணை செய்யப்பட்டதில், 350 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2,34,60,090 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. மொத்தம் ரூ.30,50,79,882 மதிப்பிலான தொகைக்கு தீர்வு காணப்பட்டன.
சிதம்பரம்: சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில், இலவச வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு - நீதிபதியுமான வி.எம்.நீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சுதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.அறிவு, குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.ஆயிஷ்பேகம், ஆர்.பார்த்தீபன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் ஆர்.கிரி, பி.கோபாலகிருஷ்ணன், சமூக சேவகர் எம்.தேவதாஸ் ஆகியோர் 3 அமர்வுகளாக மக்கன் நீதிமன்றத்தை நடத்தினர்.
இதில், வாகன விபத்து வழக்கு, சிவில் வழக்கு, காசோலை மோசடி வழக்கு, பணி பரிவர்த்தனை வழக்கு, குடும்பப் பிரச்னை உள்ளிட்ட 815 வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு 2 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 293 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இலவச வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் ஏ.அஸ்வத்ராமன் நன்றி கூறினார்.
பண்ருட்டி: பண்ருட்டி நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு-நீதிபதியுமான கே.பழனியம்மாள் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி எல்.கமலக்கண்ணன், குற்றவியல் நடுவர் டி.கணேஷ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். இதில், மொத்தம் 857 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ.50.63 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com