கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்துக்கு  நிகழாண்டு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்துக்கு  நிகழாண்டு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
கடலூர் அருகே உள்ள சிங்கிரிகுடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், 50 பயனாளிகளுக்கு இலவச கறவைப் பசுக்களை வழங்கினார். 
முன்னதாக அவர் பேசியதாவது: கிராமப்புற ஏழைப் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்காக நிகழாண்டு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வால் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
கடலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 2017-18-ஆம் ஆண்டில் சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 20 கிராமங்களில் 1,000 பெண்களுக்கு பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.8.96 கோடி மதிப்பீட்டில் 163 கிராமங்களைச் சேர்ந்த 6,684  பெண்களுக்கு 26,736 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.80.72 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. புறக்கடைக் கோழி வளர்ப்புத் திட்டத்தின்கீழ் ரூ.21.75 லட்சம் மதிப்பீட்டில் 870 ஏழைப் பெண்களுக்கு தலா 20 கிரிராஜா இன நாட்டுக் கோழிகள் வீதம் மொத்தம் 17,400 கோழிகள், தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
கடலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் விதத்தில் 182 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் ரூ.2.18 லட்சம் மதிப்பில் நடத்தப்பட்டன. பாசன வசதி உள்ள 450 ஏக்கர் நிலங்களில் தீவனப்புல் சாகுபடி செய்ய ரூ.24 லட்சமும், 3,000 ஏக்கர் மானாவாரி நிலத்தில் தீவன சோளம் சாகுபடிக்கு ரூ.45 லட்சமும், அசோலா வளர்ப்புக்கு ரூ.12.8 லட்சம் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.  நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் விவசாயத் துறையுடன் இணைந்து முகாம்கள் நடத்தப்பட்டு கால்நடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 
இந்தத் திட்டத்துக்காக நல்லூர், மங்களுர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 10,000 மாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மடி பாதுகாப்பு, சினைப் பிடிக்காத மாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். 
 முன்னதாக, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சுமதி வரவேற்றார். நிகழ்ச்சியில், சார்-ஆட்சியர் (பொ) வீ.வெற்றிவேல், கடலூர் வட்டாட்சியர் சத்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி, கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கடலூர் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் ராகவன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com